மாணாக்கர் பக்கம்

சென்ற இதழ் மாணாக்கர் பரிசு திட்டம்-128இன் விடை:

தெளிவுக்காகச் சொற்பிரித் தெழுதப்பட்ட திருக்குறட் பகுதிகளின் புணர்த் தெழுதப்பட்ட வடிவங்கள்.

1. இல்லாள்கண் தாழ்ந்த இயல்பு இன்மை - 903
இல்லாள்கட் டாழ்ந்த வியல்பின்மை

2. நோக்கினாள் நோக்கெதிர் நோக்குதல் தாக்கணங்கு - 1082
நோக்கினா ணோக்கெதிர் நோக்குத றாக்கணங்கு

3. மென்றோள் துயிலின் - 1103
மென்றோட் டுயிலின்

4. நீங்கின் தெறூஉம் - 1104
நீங்கிற் றெறூஉம்

5. கதுப்பினாள் தோள் - 1105
கதுப்பினா டோள்

6. எவன் ஆவர் மன்கொல் துயர்வரவு - 1165
எவனாவர் மற்கொ றுயர்வரவு

7. வாராக்கால் துஞ்சா வரின் துஞ்சா - 1179
வாராக்காற் றுஞ்சா வரிற்றுஞ்சா

8. எழுநாள்போல் செல்லும் சேண்சென்றார் - 1269
எழுநாள்போற் செல்லுஞ்சேட் சென்றார்

9. துன்பத்திற்கு யாரே துணையாவார்- 1299
துன்பத்திற் கியாரே துணையாவார்

10. புலத்தலின் புத்தேள் நாடு உண்டோ - 1323
புலத்தலிற் புத்தேணா டுண்டோ

சரியான விடை எழுதியோர்

இரா. கலைச்செல்வி-நாமக்கல்,
த. முத்தமிழ்-கோவை,
ச. தமிழ்ச்செல்வி-கள்ளக்குறிச்சி,
மு. இன்பஅன்பன்-திருக்களாச் சேரி,
புலவர் திருக்குறள் நாவை. சிவம்.

மாணாக்கர் பரிசு திட்டம்-129
விடுகதை

பரவையே கல்வி காரம் பகல் அன்னை இடையெ ழுத்தும்
கரடிபால் வெள்ளை பிள்ளை காண்முதல் எழுத்தும் கொண்டு
நிரல்பட நிறுத்திச் சொன்னால் நிகரிலாத் தமிழர் நாட்டை
உருவாக்க உதவும் அந்த ஒருதொடர் அறிந்து ரைப்பீர்!

இந்த விடுகதைக்கான விடையை வரும் சிலை 20 (5. 1. 2008)க்குள் வந்து சேருமாறு அனுப்புக.