கண்ணிற் பட்டதும் கருத்திற் பட்டதும்

1. எகிப்து நாட்டில் செங்கடற்கரையில் அகழாய்வில் பண்டைத் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பெற்ற பானை ஓடு ஒன்று கிடைத்திருக்கிறது. இந்த எழுத்துக்களை முனைவர் ஐ. மகாதேவன், முனைவர் ஒய். சுப்பராயலு. பேராசிரியர் கே. இராசன், பேராசிரியர் வி. செல்வகுமார் ஆகியோர் 'பானை ஒறி' என்று படித்துள்ளனர். மேலும் இவ்வெழுத்துக்கள் கி.மு. முதல் நூற்றாண்டைச் சார்ந்தவை என்றும் தெரிவித்திருக்கின்றனர். பானை ஒறி என்பது உறியில் வைக்கப்பெற்றுத் தொங்கவிடப்பெற்றுள்ள பானையைக் குறிக்கும் என்று பொருள் கூறியிருக்கின்றனர். இந்து நாளிதழின் இச்செய்தியையும் மற்றும் நிழற்படத்தின் எழுத்துக்களையும் ஆய்வுசெய்த தொல்லியல் அறிஞர் நடன காசிநாதன் இதனைப் பனை ஓரி என்று படிக்கலாம். பனை ஓரி என்றால் பனை மாலையைத் தரித்துக் கொண்டிருக்கும் ஓரி என்று பொருள். பனை மாலை சேரர் மற்றும் தகடூர் மழவர் ஆகியோரின் குடி மாலையாகச் சங்க இலக்கியங்களில் பேசப்படுகின்றது. ஓரி என்னும் பெயர் உடையான் கொல்லி மழவரின் அரசனாக விளங்கியிருக்கிறான். வல் வில் ஓரி என்றும் அழைக்கப்பெற்றான். இந்தப் பானைக் கல்வெட்டு. பனை மாலையை உடைய ஓரி என்கிறதுஎனவே, இன்றைக்கு 2200 ஆண்டுகளுக்கு முன்பாகவே கொல்லி மழவர்களுக்கும், எகிப்து போன்ற மேற்கத்திய நாடுகளுக்கும் வணிக உறவு இருந்தது என்பதை இச்சிறு கல்வெட்டுப் புலப்படுத்துகிறது என்று உணரலாம். மேலும் இக்கொல்லி மழவர்கள் வன்னியர் இனத்தைச் சார்ந்தவர்கள் என்பதும் அறியற்பாலது. -தமிழ் ஓசை 22.11.07

அரிதிற் கிடைக்கும் பழைய வரலாற்றுத் தடையங்களுக்குத் தமிழ்ப்பகைவர்கள் இப்படியெல்லாம் திசை திருப்பும் விளக்கங்களைக் கூறித் தமிழர்களின் தொன்மையை மறைத்திருக்கவும் கூடும் என்பதும் அறியற்பாலது!

2. தமிழலங்காரம் என்ற நூலில் வண்ணச்சரபம் தண்டபாணி அடிகளார்,

தமிழ்மொழிக் குயர்மொழி தரணியில் உளதெனில்
வெகுளியற் றிருப்போன் வெறும்புல வோனே

என்று கூறுவார். தேவகோட்டைத் திருப்புகழில் வடமொழி கலவாது விளங்கும் தனித்தமிழைப் பாராட்டி யுள்ளார். தமிழ் தெரியாத தெய்வம் உண்டென்பது தவறு. தமிழ் தெரியாத தெய்வம் பேய் என்பதை,

தமிழ்ச்சுவை அறியாத் தெய்வம் உளதெனில்
அஃதுணர் அலகையில் தாழ்வெனல் அறமே

வண்ணச்சரபர் பாடுவார். (தமிழ் ஓசைக் களஞ்சியம். 25.11.07)

வடமொழியில் அர்ச்சனை செய்தால் மட்டுமே விளங்கிக்கொள்ளும் இன்றுள்ள கடவுள்கள் எல்லாம் கடவுள்களே அல்ல, பேய்கள் என்பதை அடிகளார் சொல்லாமல் சொல்கிறார்!

3. தமிழ் மொழியில் இலக்கிய ஞானம் உள்ள பலருக்கு அதே அளவுக்கு ஏனோ இசையறிவு இல்லை. இசையில் நல்ல அறிவு உள்ள வித்வான் களுக்குப் போதுமான அளவுக்குத் தமிழ் மொழியறிவில்லை. இதுதான் முன்பிருந்த முரண்பாடான நிலை.-தென் ஆசிரியச் செய்தி, 2007 திசம்பர் 01-15

இப்பொழுதுமட்டும் என்ன வாழுகிறதாம்? இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் ஆகிய மூன்று தமிழிலும் வல்ல முழுத்தமிழ்ப் புலவர்கள் இனிமேல்தான் உருவாகவேண்டும்!