 |
நாத்திக நந்தனார் இன்று நம்மிடையே இல்லை. அண்மையில் வேலூர்ச் செந்தமிழ்க்கோ நடத்திய விழாவில் என் பக்கத்தில் அமர்ந்திருந்தவர், ஐயா என்னைத் தெரிகிறதா? நாத்திக நந்தனார் என்றார். உங்கள் உள்ளத்தைப் பல ஆண்டுகளாகத் தெரியும். ஆனால் உருவத்தை இப்போது தான் பார்க்கிறேன் என்றேன். தமிழும் தமிழரும் உயர வேண்டும் என்பதையே நெஞ்சத் துடிப்பாகக் கொண்டு வாழ்ந்த நண்பர் நாத்திக நந்தனார் 19.11.2007 அன்று நம்மைப் பிரிந்தார்.
|
| அவர் தெளிதமிழுக்குச் சென்ற இதழில் எழுதிய மடலில் கூடத் தமிழைப் பற்றிய அக்கறை சிறிது கூட நம் அரசுக்கு இல்லை என்பதே பெருவேதனையானது என்று எழுதி வேதனைப்பட்டார். மேலும் நம்மை வேதனைப் படவைத்து விடைபெற்றுக்கொண்டார். அன்னாரின் குடும்பத்தினரின் அவலத்தில் நாமும் பங்கு கொள்கிறோம். |
சின்னையா என்ற செல்லத்துரை கடந்த 26ஆம் பக்கல் துலைத்திங்கள் 2038இல் (12-11-2007) கோலாலம்பூர் அலம் மேகா குடியிருப்பு இல்லத்தில் இயற்கை யெய்தினார். இவர் மலேசியத் தமிழ் இலக்கியக் கழகத்தின் தலைவர் மு. மணிவெள்ளையனின் இரண்டாவது இளவலாவார்.
இராமலிங்க அடிகளாரின் திருவருட்பாவிலிருந்து இறைமை மெய்ம்மங்களை மு. மணிவெள்ளையன் ஓத, திருக்குறளிலிருந்து கடவுள்வாழ்த்து, துறவு, மெய்யுணர்தல் ஆகிய அதிகாரங்களைக் க. இராம. மாணிக்கத்துடன் கலந்து கொண்டவர் அனைவரும் ஓதினர். திராவிடக்கழகத் தலைவர் இரெ.சு. முத்தையா தமிழ் இலக்கியக் கழகச் செயலர் அ. இளவழகர் ஆகியோரின் இரங்கலுரைக்குப் பின் உடல் எரியூட்டப்பட்டது.