குற்றமிலாத் தமிழர்தமை உசாவல் பேரால்
கொழும்பில்சீர் குலைக்கின்றான் சிங்க ளத்தான்
முற்றுமவர்க் குறவில்லா மேலை நாட்டார்
முறையின்மைக் குளம்பதைத்தார் கடிந்து ரைத்தார்
ஒற்றுமையால் உலகமெலாம் உறவாம் என்றே
உதட்டளவில் பசப்புகின்ற தில்லிக் கும்பல்
சற்றுமுளம் பதைக்கவில்லை. நடுங்க வில்லை
சழக்கருடன் இணைகூடிக் குலவு தம்மா!
பற்றிஎரி கிறதையா நெஞ்சம்! இந்தப்
பாவிகளா நம்தலைவர்? ஐயோ, ஐயோ,
பற்றழிந்த தமிழினமே, நீபோய்த் தில்லிப்
பதர்களவர் கால்விழுந்து மானம் கெட்டாய்!
நற்பகைவர் சிங்களவர் வாளைப் போன்றார்
நண்பர்போல் பகைவரன்றோ கொடியர்! சீச்சீ
வெற்றர்களே, தமிழ்வெறுப்பால் இரக்கம் கெட்டீர்
வெளியுலகம் உமைக்காறி உமிழும் தானே!
-ம.இலெ. தங்கப்பா