எங்கும் இந்தி! எதிலும் இந்தி!
( அண்ணன் தம்பி உரையாடல் )

"அண்ணே, நேற்று ஒரு நாட்டிய நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன். அங்கே பாடிய பாட்டு எனக்குப் புரியவேயில்லை. அதுக்கு ரொம்பப் படிக்கணுமோ?"

"இல்லை தம்பி, அங்கே நமக்குப் புரியாத தெலுங்கு மொழியில் பாடியிருப் பார்கள். படிக்காத மக்களுக்கும் புரியும் மொழியில்தான் நாட்டியப்பாடல் இருக்கவேண்டும் என்று இலக்கணமே இருக்கிறது. அப்படிப்பட்ட எளிய தமிழ்ப்பாடல்கள் ஆயிரக்கணக்கில் தமிழில் இருக்கின்றன. ஆனால் அவர்கள் அவற்றைப் பாடமாட்டார்கள்".

"ஏன் பாடமாட்டார்கள்?"

"ஏனென்றால் தமிழ்ப் பாடல் தெரியாது. அவர்களுக்குப் பழக்கமாகி விட்டவை தெலுங்குப் பாடல்களே."

"தமிழர்களுக்கு எப்படித் தெலுங்குப்பாடல்கள் பழக்கமாகிவிட்டன?"

"ஒரு காலத்தில் தமிழ்நாட்டைத் தெலுங்கர்கள் ஆண்டார்கள். அப்போது தமிழர்களே தெலுங்கு கற்றுக்கொண்டு தெலுங்கில் பாட்டு எழுதினார்கள். பாடினார்கள். ஆடினார்கள். அந்தப்பழக்கம்தான் இன்னும் தொடர்கிறது. ஊறிப் போன அந்த அடிமைப் பழக்கத்தை உதறித்தள்ள முடியவில்லை."

"ஓ, அப்படியா? ஆங்கிலேயர் ஆண்டபோது பழகிப்போன ஆங்கிலத்தை விடமுடியாமல்தான் நமது அரசு இன்னும் ஆங்கிலத்தை ஆட்சிமொழியாகப் பயன்படுத்துகிறதா?"

"ஆமாம், தமிழ் ஆட்சிமொழி என்று சட்டம் செய்து கண்ணாடி போட்டு மாட்டிவிட்டு, 60 ஆண்டுகளாக ஆங்கிலத்திலேயே மேளதாளத்துடன் அலுவல் செய்துவருகிறது நமது அரசு. ஆங்கிலம் படித்தவர்களுக்கே வேலை தருகிறது. அதனால் பெற்றோரும் தம் பிள்ளைகளை எப்பாடுபட்டாவது ஆங்கிலம் படிக்கவைக்கின்றனர். அதனால்தான் ஆங்கிலம் மதிப்புடன் வாழ்கிறது. தமிழ் ஆதரவில்லாமல் சாகிறது."

"ஓ, நீதி மன்றத்தில் என்னுடைய வழக்கில் எனக்குப் புரியாத ஆங்கிலத்தில் வழக்கறிஞர்கள் வாதாடுகிறார்களே, அதுகூட அதனால்தானா?"

"அதுகூட இனிமேல் முடியாது தம்பி, உயர்நீதிமன்றங்களில் இந்தியில்தான் பேசவேண்டும் என்று சட்டம் வரப்போகிறது! இனிமேல் இந்தி தெரியாத வழக்கறிஞர்கள், உன் கூடவே ஓர் ஓரமாக உட்கார்ந்துகொண்டு. இந்தியில் வாதாடும் வழக்கறிஞர்களின் வாயைப் பார்த்துக்கொண்டிருக்க வேண்டியது தான்!"

"ஏன் அண்ணே, நாம் தமிழர்கள். நம் தாய்மொழி தமிழ். நம் நாடு தமிழ்நாடு. தமிழ்நாட்டு நீதிமன்றங்களில் தமிழர்களின் வழக்குகள் தமிழில் நடப்பதுதானே முறை? முன்னேதான் ஆங்கிலேயன் ஆண்டான். ஆங்கிலத்தில் நடந்தன. அந்தப் பழக்கத்தால் இப்போதும் ஆங்கிலத்திலேயே நடப்பதாகச் சொன்னீர்கள். இனி இந்தியில் நடக்கும் என்கிறீர்கள். அப்படியானால் இப்போது நம்மை இந்திக்காரனா ஆள்கிறான்? அண்ணே, எப்போதுதான் தமிழ் நாட்டைத் தமிழன் ஆளப் போகிறான்? மொழிக்காக உயிரைக் கொடுப்பவர்கள் உலகத்தில் தமிழர்கள்தான் என்கிறார்களே! இந்த அழிம்புகளை யெல்லாம் பார்த்துக்கொண்டு அத்தகைய தமிழர்கள் என்ன செய்துகொண் டிருக்கிறார்கள்?"

"மொழிக்காக உயிரைக் கொடுத்ததா? அது ஒரு காலம் தம்பி. அப்படிப்பட்ட மொழிப்பற்றாளர்களில் சிலர் இப்போது மேடைபோட்டு, எதிர்காலத்தில் தமிழ் வாழுமா? சாகுமா? என்று பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். சிலர் தமிழின் பெருமையைப்பற்றிப் பாடல் எழுதி, அதைப் படத்துடனும் பணத்துடனும் இதழ்களுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். சிலர் மொழி அமைப்புகளை ஏற்படுத்தி, அதற்குத் தலைவர் என்றும் செயலர் என்றும் தமக்குத் தாமே பதவி கொடுத்துக்கொண்டு மடற்கற்றை அச்சிட்டுக் கொண்டிருக்கிறார்கள். மழைத்துளியை எதிர்பார்த்து வாயைப் பிளந்துவைத்திருக்கும் சகோரப் பறவையைப்போல. விருது கொடுக்கும் அமைச்சரது கடைக்கண் பார்வை எப்போது தம்மேல் விழுமோ என்று சிலர் ஏங்கித் திரிகிறார்கள். தன்னைச் சுற்றிலும் காடு எரிந்துகொண்டு வருவதைப் பார்த்தும் சோம்பலால் நகராமல் கிடக்கும் மலைப்பாம்புபோல. தம்மைச் சுற்றிலும் நடக்கும் எல்லாக் கொடுமைகளையும் பார்த்துக்கொண்டு பெரும்பாலோர் சோம்பிக்கிடக் கின்றனர். சிலர் திருக்குறள் தோன்றிய தமிழைப்பற்றிக் கவலைப்படாமல் முழுநூலையும் முற்றோதல் செய்து, வழிபாடு நடத்திக்கொண்டிருக்கிறார்கள். ஆட்சி நாற்காலியில் அமர்ந்திருக்கும் தமிழர்களோ, எழுந்தால் எங்கே நாற்காலி நழுவிவிடுமோ என்று அஞ்சி, அதை உடும்புப் பிடியாகப் பிடித்து உட்கார்ந்துகொண்டு, எது எக்கேடு கெட்டால் எனக்கென்ன என்று ஆட்சி யின்பத்தை அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள்."

"அப்படியானால் நமது தமிழ் கல்விமொழி ஆக. ஆட்சிமொழி ஆக, நீதிமன்ற மொழி ஆக, கலைமொழி ஆக என்னதான் வழி அண்ணே?"

"ஒரே வழிதான் எனக்குத் தோன்றுகிறது. தமிழ் நாட்டில் எல்லா மட்டத்திலும் இந்திமொழி வரவேண்டும். மழலையர் வகுப்புமுதல் பல்கலைக்கழகம்வரை இந்தியைக் கட்டாயப்பாடம் ஆக்கவேண்டும். இந்தி படித்தவர்களுக்கே அரசு வேலை தரவேண்டும். அரசு அறிவிப்புகள். மடல்கள் யாவும் மக்களுக்கு இந்தியிலேயே வரவேண்டும். இந்தி தெரிந்தவர்களே சட்டமன்ற. நாடாளுமன்ற உறுப்பினர் ஆகலாம் என்ற சட்டம் வரவேண்டும். இந்தியில் சட்டம் படித்த வழக்கறிஞர்களே நீதிமன்றத்திற்குள் நுழையமுடியும் என்ற நிலை வர வேண்டும். எங்கும் இந்தி! எதிலும் இந்தி! என்றாக வேண்டும். தமிழ்நாட்டில் மக்கள் அனைவரும் ஒன்றும் புரியாமல் முடியைப் பிய்த்துக்கொள்ள வேண்டும்!"

"என்ன அண்ணே இப்படிச் சொல்றீங்க!"

"ஆமாம் தம்பி, அப்போதுதான் தமிழர்களுக்குச் சூடு பிறக்கும். சுரணை பிறக்கும். நாம் வாழ்வது இந்திக்காரன் ஆளும் இந்தி நாட்டிலா? தமிழ்நாட்டிலா என்று எண்ணிப்பார்க்கத் தோன்றும்!"