ஏரினும் நன்றால்... - சிறுகதை
பொறிஞர் அகன் ஐயர், மாத்தூர்(தொடர்ச்சி)

பனையூரில் வாழும் என் நண்பர் அன்புமணிக்கு அலைப்பேசி வழியே நாங்கள் வரவிருப்பதை அறிவித்தேன். மிகவும் மகிழ்ந்து வருக, வருக என்றார்! ஞாயிறன்று காலை உணவுக்குப்பின் மகிழுந்தில் புறப்பட்டோம்! பல்லாண்டுகள் சென்றபின் எம் தாய்மண்ணுக்குச் செல்கிறேன் என்ற நினைவே இனித்தது!

திருச்சிராப்பள்ளிக்கு வடக்கே 60 கட்டைத் தொலைவில், பச்சை மலைக்கும் கொல்லிமலைக்கும் இடைப்பட்ட 20360 குறுக்கம் (ஏக்கர்) நிலப்பரப்பைக் கொண்ட 120 ஊர்களைக் கொண்டதாகத் துறையூர்ப்பாளையம் (சமீன்) விளங்கிற்று. செட்டிக்குளம் என்னும் மூதூரிலிருந்து பாளையக்காரர் ஆட்சி செய்தார்! கி.பி. 1650 இல், அண்ணா இரெட்டி என்ற வந்தேறி வடுகநரி, வஞ்சகமாகக் கைப்பற்றிக் கொண்டான் துறையூர்ப்பாளையத்தை! பெரும்புலியூர் என்ற மூதூரின் பெயரைப் பெரம்பலூர் என மாற்றியவன் இவனே! வளமான மண் மக்களின் நிலங்களைப் பறித்துக் கோவில்களுக்கு இறையிலி யாகவும், பார்ப்பனர்களுக்கு நன்கொடையாகவும் அளித்த வஞ்சக வடுகக் கொடுங்கோலனும் இவனே! தங்கள் வளநிலங்களைப் பறிகொடுத்த மண் மக்கள் மலையடிவார முல்லை நிலக் குறுங்காடுகளைக் கொன்று கொல்லைகள் பலவற்றை உருவாக்கி. வானாவாரிப் பயிர்விளைத்து வறியவர் ஆயினர்! வாழ்வின் வளமற்று வாடினர்! பெரும்புலியூருக்கும் துறையூருக்கும் இடையில் சாலையின் மருங்கே அமைந்துள்ள நல்லசேலம் (நக்கசேலம்) என்ற ஊரையடுத்துள்ளதே எம்பனையூர்! ஆடு மாடுகளை மேய்த்தும், வானாவாரித் தவசங்களையும் பயறுகளையும் விளைவித்தும் வாழ்கின்றனர் எம்மக்கள்!

நானும் அன்புமணியும் கால்நடைகளை மேய்த்துக்கொண்டேதான் கல்வியையும் கற்றோம்! ஊரிலிருந்து தெற்கே நெளிந்து வளைந்து செல்லும் வண்டிப்பாதையே நாங்கள் பள்ளிக்குச் செல்லும் பாதை! பாதையின் இரு மருங்கும் வளர்ந்திருக்கும் கொடுக்காய்ப்புளி. பழங்களே எம் போன்ற மாணாக் கருக்கு வழித்தீனி! பச்சை வண்ண நுணாக்காய் பழுத்துக், கறுப்புக் கனியாக மாறுவது எமக்கு வியப்பாக இருக்கும்! சாமை, வரகு, சோளச்சோறும், கம்பு, கேழ்வரகுக்கூழும், தொட்டுக்கொள்ளத் துவையலும் ஊறுகாயும் தான் எம் அன்றாட உணவு! வாரச்சந்தை கூடும் நாளில் மட்டுமே காய்கள் போட்ட பருப்புக் குழம்பைச் சுவைப்போம். நல்ல நாள்களில் நெல்லுச் சோறும் கறி, கோழி, மீன் குழம்பும்! நல்ல நாள்களுக்காக நாங்கள் ஏங்கித் தவிப்போம். இட்டவி, தோயை, பணியாரம் போன்றவையும் அந்த நாள்களில் காலை உணவாகக் கிட்டுமே !

தொடக்கப் பள்ளிப் பருவத்திலிருந்தே நானும் அன்பும் நண்பர்கள்! பள்ளிக்கல்வி முடித்து நான் பொறியியல் கற்கவும், அன்பு பொருளியல் கற்கவும் எனக் கல்லூரிக்கல்வி பிரித்தபோதும், பொறியாளராக நானும், முதுகலை ஆசிரியராக அன்பும் எனப் பணிநிலை பிரித்த போதும், எனக்குக் கயல்விழியும், அன்புக்குக் கண்மணியும் வாழ்க்கைத் துணையாக வாய்த்தபோதும். இன்று பணிநிறைவு செய்து ஓய்ந்திருக்கும்போதும், எம் நட்பைப் பிரிக்க எந்தக் காரணியாலும் இயலவில்லை ! நிறைநீர நீரவர் கேண்மை எனப் பேராசான் (782) கூறியுள்ளதற்குச் சான்றே எம் நட்பாம்!

மனத்தில் மலர்ந்த பழைய நினைவுகள் பயண நேரத்தையே மறக்கச் செய்துவிட்டன. திருச்சிராப்பள்ளியிலிருந்து புறப்பட்டு ஒரு மணி நேரம் ஆகியிருந்தது! செட்டிக்குளத்தை நெருங்கிவிட்டோம். இன்னும் அரை மணிக்குள் எம் பனையூரை அடைந்துவிடுவோம்! ஊரின் தொடக்கத்திலேயே அன்புமணியின் வீடு! வீட்டின் முன்னே சாலையோரத்தில் நின்றவாறே, வழிமேல் விழிவைத்துக் காத்திருந்தார் என் அன்பான அன்பு! அகத்தின் மகிழ்ச்சிப்பெருக்கு முகத்தில் பொங்கிட அன்பாக வரவேற்றனர் அன்பும்-கண்ணும். தேநீர் அருந்தியவாறே பல செய்திகளைப் பேசிக் களித்தோம். பின் எம் பயணநோக்கத்தைக் கூறினேன்! எங்களை வியந்து போற்றினர்!

"பணி ஓய்வுத்தொகை பன்னிரண்டு இலக்கமும் நம் பனையூர் மக்களின் நிலைத்த மேம்பாட்டுக்குப் பயன்படவேண்டும். அதற்கேற்ற நல்ல திட்டத்தை வகுத்துச் செயலாற்றவேண்டும்" என்றேன். தமிழ்ப்பள்ளி தொடங்குவது, அறக்கட்டளை நிறுவுவது, ஏழை மாணாக்கருக்கு உதவுவது, கால்நடைப் பண்ணை அமைப்பது, முதலான பல்வேறு திட்டங்களையும் கலந்தாய்ந்தோம்.

"இவற்றைச் செய்து தருவதற்குத்தானே அரசு என்ற ஒன்று இருக்கின்றது? முறைப்படி முயன்று அரசிடமிருந்து இவற்றைப் பெறலாமே! அரசால் செய்ய இயலாத நல்ல திட்டம் ஒன்றை நாம் செயல் படுத்தினால் சிறக்குமே" என்றார் கயல்!

"மாலையில் ஊர்ச்சாவடிக்குச் செல்வோம். அங்குப் பலரிடமும் கலந்து பேசி முடிவுசெய்யலாம்" என்றார் கண்மணி! அதுவும் சரியெனப்பட்டது, பகல் உணவை முடித்துச் சற்று ஓய்வெடுத்த பின்பு நால்வரும் ஊர்ச் சாவடியை நோக்கி நடந்தோம். எதிர்ப்பட்ட மூத்தோர் இளையோர் பலரையும் உடன் அழைத்துச் சென்றோம். சற்று நேரத்தில் ஆடவரும் மகளிருமாக ஐம்பதுக்கும் மேற்பட்டோர் சூழ்ந்துவிட்டனர்! நான் என் விருப்பத்தையும் நோக்கத்தையும் தெளிவாகக் கூறினேன்! "இந்தக் காலத்திலும் ஐயா" என்றார் ஒரு மூதாட்டி! அவரின் வாழ்த்தைப் புன்முறுவலுடன் ஏற்றுக்கொண்டு "அம்மா. நம்ம ஊர் மக்கள் நல்லா இருக்க என்ன செய்யலாம் என்று சிந்தித்துக் கூறுங்கள்" என்றேன். "வெள்ளாமை நல்லாக் கண்டாலே நாங்க நல்லா இருப்போமே. எந்தக் கேணியிலும் தண்ணீர் இல்லை. ஊற்றே வறண்டு போச்சு! பெய்கிற மழையெல்லாம் ஓடையிலேயே ஓடி வீணாகுது. அந்த ஓடையை மறிச்சு இரண்டு மூன்று இடத்திலே தடுப்புக் கட்டினா மழைநீர் தேங்கும், கேணிகளுக்கும் ஊற்று வரும். அதிகாரிகளிடம் பலகாலமா கேட்டுப்பார்த்தும் பயனில்லை. அந்த ஓடை பட்டா ஓடையாம். புறம்போக்கு ஓடையிலேதான் அரசு தடுப்புக் கட்டித்தருமாம்". ஒரு பெரியவர் விளத்தமாகக் கூறினார்!

( தொடரும் )