
|
அறிவியற் சொல் ஒலி வடிவங்கள்
இரா. செம்பியன் (தொடர்ச்சி) இதில் கருத்து வேறுபாடு உள்ளவர்கள் குறித்து எதுவும் சொல்வதற்கு இல்லை. அதேபோல் நாமும் அறிவியல் சொற்களை, செய்திகளை ஒலி பெயர்த்து நம் தமிழில் ஏற்போமானால் பிறமொழி எதையுமே நமது மொழியின் வரி வடிவத்துள் நுழையாமல் அறவே தடுத்துவிட முடியும் என்ற நம்பிக்கையில், கிட்டத்தட்ட நூற்றுப்பதினாறு ஒலி உருவங்களை வடிவமைத் திருக்கின்றோம். அறிவியல் சொற்களில் வரும் ஒலிகளில் எவ்வெவ் வொலிகளை எல்லாம் ஏற்க எவ்வெவ்வெழுத்துக்கள் எல்லாம் இடர்ப்படுகின்றனவோ அவ்வெழுத்துக்களோடு ஒலி உருக்களை இணைத்துள்ளோம். இதன்வழி எல்லா ஒலிகளையும் ஏற்கும் திறன் தமிழுக்கு வந்துவிட்டது. இனி எங்கும் தமிழ் எதிலும் தமிழ் எல்லாம் தமிழ் என்ற நிலையை இப்படி ஒலிபெயர்ப்பதின் மூலம் எட்டிவிட்டோம் என்பதை உறுதியாக நம்பலாம். இனி வரிவடிவில் பிற வடிவம் வரவே வராது வண்டமிழின் வரி வடிவம் கெடவே கெடாது என்பது வெள்ளிடைமலை. 'உடல் மண்ணுக்கும் உயிர் தமிழுக்கும்', 'வாழ்ந்தாலும் தமிழுக்காக, மடிந்தாலும் தமிழுக்காக' என்று தமிழோடு தங்கள் வாழ்வை இணைத்துக் கொண்டு தமிழே மூச்சாய், தமிழே பேச்சாய், தமிழே உயிராய் வாழ்ந்து கொண்டிருக்கும் தகைசால் தமிழ்ச்சான்றோரே! தமிழின்றித் தனித்துயிர்க்க இயலாத தமிழ் மறவர்களே! வட்டமிடும் கழுகுகளாய் வளர்ந்துவரும் மொழிப் பகைவர் கொட்டமடிக்கின்ற கொடுமையினைக் கண்டு மனம் குமைகின்றோரே! பெற்றெடுத்த தாய்வயிற்றைப் பிளந்தவளைக் கொல்வதுபோல் வந்த வாழ்வதனைத் தந்த தமிழதனை அன்றாடம் அழிப்பதையே அறப்பணியாய்ச் செய்துவரும் கேடுகெட்ட ஊடகங்கள், கேள்வி முறையின்றிப் புற்றீசல் போலப் பொலபொலெனப் பெருகி நாடெங்கும் சென்றோடி நஞ்சதனைப் பரப்பி வரும் சிற்றிதழ், பேரிதழ், சீரழிக்கும் வார இதழ், பற்றிவளர் நோய்போலும் படர்ந்து வரும் பருவஇதழ், தித்திக்கும் தீந்தமிழைத் தீர்த்துவரும் திங்களிதழ், எத்திக்கும் புகழ்மணக்க இனிதிருந்த தமிழணங்கைக் குத்திக் கொல்கின்ற கொடுமையினைக் களையாமல் எற்றுக்கோ வாழ்கின்றோம் என்றழுங்கும் புலவர்கள், நற்றமிழின் சுவையதனை நன்கறிந்த பாவலர்கள், தமிழையே தமிழால் கொல்லும் தரங்கெட்ட ஏடுகள் இழிவழக்கை மொழிவழக்காய் எழுதிவரும் கீழ்மையினை எண்ணி வருந்தாமல் இருக்கவே மாட்டார்கள். இந்நிலையினராய தமிழறிஞர்களின் கருத்தின் தாக்கமே இவ்வறிவியற் சொற்கள் ஒலிபெயர்ப்பு முயற்சி. வேற்று மொழிக் கலப்பென்ற வெப்பு நோயில் வாடும் அன்னைத் தமிழுக்கு எம்மாலியன்றதோர் சிறிய தொண்டாகக் கருதி அறிவியல் சொற்களை ஒலி பெயர்க்கும் கருவியாக ஒரேயொரு குறியீட்டை மட்டும் இருநிலைகளில் முன்னும் பின்னுமாகப் பயன்படுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட ஒலி உருக்களை வடிவமைத்துள்ளோம். அவற்றைப் பயன்படுத்தித் தமிழ் வரிவடிவங்களில் புகுத்தப்பட்டுள்ள பிறமொழி எழுத்து, சொல், வடிவங்களை அறவே நீக்கிவிட முடியும். இப்பணியினை நுனித்து நோக்கும் நுண் மாண் நுழைபுலத்து நூல்வல்லோர் உவந்தேற்பர் என்பதற்குச் சான்றாக சிந்து வெளி ஆய்வறிஞர் முனைவர் இரா. மதிவாணன் அவர்களின் கருத்து இந்நூற்கு முன்னுரையாக வைக்கப்பட்டது. எனினும் இதுவே இறுதி வடிவமுமன்று, முடிந்த முடிபுமன்று. ஏனைய மொழிநூல் வல்லாரின் மேலான பார்வைக்கு இவ்வொலிவடிவங்கள் வைக்கப்படுகின்றன. இனி இவற்றை இறுதி செய்ய வேண்டியது அவர்தம் கடனே. வாழ்க தமிழ்! விழித்தெழுக தமிழ்க் குமுகாயம்! ஒலி ஏற்றிய எழுத்து வடிவங்களை இனிக் காண்போம். ஒலிக்குறி இடப்பட்ட தமிழெழுத்து வடிவங்கள்
"வரிவடிவில் வந்தமரும் பிறவடிவை நீக்குவோம் ஒலிக்குறிகள் இணைக்கப்பட்ட அறிவியல் தமிழ் எழுத்துக்கள்அவ்வவற்றின் அடியில் அவ்வவ்வொலி வண்ணங்களையும் அளவுகளையும் குறிக்கும் வகையிலும் பயிலுவார்க்கு எளிதில் விளங்கும் வகையிலும் ஆங்கில வடிவங்களாக்கித் தரப்பட்டுள்ளன இதில் சிறப்பு என்னவென்றால் ஒரேயொரு குறியீட்டை இரு நிலைகளில் முன்பின்னாகப் பயன்படுத்தி 116 ஒலி உருக்கள் அமைக்கப்பட்டுள்ளதுதான். இன்னொரு சிறப்பு இவ்வெழுத்துக்கள் தங்களைத் தாங்களே விளக்கி நிற்பதால் இதில் பயிற்சி பெற யாருதவியும் தேவை இல்லை என்பதே.
(தொடரும்) |