
|
தேவர் அனையர் . . .
- சிறுகதை
ச. கலியாணராமன். ஒலியயழுப்பிய கைப்பேசியை எடுத்துக்கேட்டேன் "வணக்கம்; நான் வளன்" "வணக்கம்; நான் கந்தப்பன். நாளைக் காலை 6.00 மணிக்குத் திருச்சி வருகிறேன். உங்களைக் கண்டு உரையாட வேண்டும். தொடர்வண்டிச் சந்திப்பின் வாயிலில் காத்திருங்கள்". "சரி உங்களை நான் கண்டதில்லையே..! சட்டைப் பையடக்கத் திருக்குறள் நூலைக் கையில் பிடித்திருப்பேன். அடையாளங் கண்டு கொள்ளுங்கள்." "மிகச்சரி.... நாளை சந்திப்போம்." யார் இந்தக் கந்தப்பன்? என்னைச் சந்திக்க வருவதன் நோக்கம் என்ன? என் கைப்பேசி எண்ணையும் அறிந்து வைத்துள்ளாரே...! எனப் பலவாறாக எண்ணியபடியே என் அலுவலைத் தொடர்ந்தேன். மறுநாள் காலை தொடர்வண்டிச் சந்திப்பில் சந்தித்தோம். இல்லத்திற்கு வந்தோம். முன்னர் அறிந்திடாதவர்! "நான் முனைவர் பட்டம் பெற்ற தமிழறிஞன். இதோ நான் எழுதிவெளியிட்ட நூல்களிற் சில".. என்றவாறு ஒரு நூற்கட்டை அளித்தார்! "கருவூருக்கருகில் ஒருநிலம் பார்த்துள்ளேன். விலைக்கு வாங்குவதற்காக உங்களை அழைத்துச் சென்று அந்நிலத்தை ஆய்வுசெய்து, வளமான நிலமாக ஆக்கும் வகை குறித்துக் கலந்தாய்வு செய்யவேண்டும். வேளாண்மைப் பொறியியல் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற நில மேலாண்மை -நீர் மேலாண்மைப் பொறியியல் வல்லுநர் அல்லரா நீங்கள்?" "மிக மகிழ்வையா... என்னால் இயன்றதை நிறைவாகச் செய்வேன். உணவுண்டபின் செல்லலாம்." கருவூரில் ஒருவர் காத்திருந்தார். அவரின் மகிழுந்து எங்களை ஏந்திச்சென்று ஒரு சிற்றூர்ப்புறத்தே நின்றது. நிலத்திற்குள் ஊடுருவிச் சென்று ஆய்வு செய்து, அவ்வவ்விடத்திலேயே எனது கணிப்புரையைக் கூறினேன். அவரும் எழுதிக் கொண்டார். விளக்கங்களையும் கேட்டுக் குறித்துக்கொண்டார்! "வளன்... நீங்கள் இந்த நிலத்திலே ஒரு சிற்றில்லில் தங்கிவாழ்ந்து, நில-நீர் மேம்பாட்டுப் பணிகளைச் செய்தால் மகிழ்வடைவேன்." "என்னால் இயலாதையா... ஆய்ந்து கணித்துக் கூறுவதோடு சரி. நீங்களே உங்கள் நிலத்தில் பணியாற்றுங்கள். அவ்வப்போது, நீங்கள் அழைத்தால் நான் வந்து கருத்துரைப்பேன்; வழிகாட்டுவேன். அரசுபணி ஓய்விற்குப்பின், என் திருவள்ளுவர் மன்றப் பணிகளும், தமிழியப் பரப்புரை, எழுத்துப் பணிகளுமே எனக்கு முதன்மை." "சிற்றிதழ்களில் உங்கள் பா, கட்டுரை, கதைகளைப் படிக்கிறேன். மிக நன்றாக உள்ளன. சென்னைக்கு வந்து பல தமிழமைப்புகளில் கருத்துரையாற்றலாமே. நான் ஏற்பாடு செய்கிறேன்." "சென்னையில் இல்லாத தமிழியப் போராளியரா? சிற்றூர்ப்புறச் சிறார்களின் உள்ளத்தில் தமிழிய வித்துக்களை விதைப்பதே என் தலையாய பணி". பின், தமிழ் - தமிழ்த் தேசம் - தமிழ்த்தேசத்தமிழர் - ஈழத்தமிழர் - உலகத்தமிழர் படும்பாடு: தமிழர் தலைவர்கள் எனக் கூறிக்கொள்வோர் தமிழரையே ஏய்த்து உறிஞ்சிக் கொழுக்கும் கயமைக்கேடு; மேய்ப்பர்களே ஏய்ப்பர்களாகி விட்ட தீயூழால் தாழ்ந்துவரும் தமிழியப் பீடு; தமிழறிஞர்களில் பலர் தமிழால் பிழைத்தும் தமிழ் உணர்வின்றித் தாழ்ந்துள்ள தீது.... எனப் பலவாறாகப் பேசி உளக்கொதிப்பைத் தணித்துக்கொள்ள முயன்றோம்! 'திருவள்ளுர் மன்றம்' அமைத்து நடத்துகிறீர்களே... அதற்கான இடம் வாங்க, கட்டடம் கட்ட நன்கொடை பெற்றீர்களா.?" "கொடையா... தமிழ்மன்றத்திற்கு எவர் தருவார் கொடை? என் கையிருப்புக்குமேல் ஓர் இலக்கம் உருவா கடனாகிவிட்டது. மூன்றாண்டுகள் சென்ற பின் என் ஆயுள் காப்பீட்டு முதிர்வுத் தொகை கிடைக்கும். அதிலிருந்து கடனை அடைத்துவிடுவேன். அதுவரை, என்மாத ஓய்வூதியம் உருவா 7 ஆயிரத்தில் வட்டிப்பணம் 3000 கட்டிவிட்டு மீதி 4000 இல் வாழ்க்கை நடத்த வேண்டியதுதான். வெளியூர்ப்பயணம், புத்தாடை முதலானவை இன்னும் மூன்றாண்டுகளுக்கு வாய்க்கா; அவ்வளவே! தமிழுக்காகப் பட்ட கடன்தானே? மனநிறைவாகவே உள்ளேன்''. "ஓர் இலக்கம் தானே...? நான் தருகிறேன். கடனை அடைத்துவிட்டு, விரிவாகத் தமிழியப் பணியாற்றுங்கள். வட்டி வேண்டாம் ஆயுள்காப்பீட்டு முதிர்வுத்தொகை கிடைத்ததும் திருப்பிக்கொடுங்கள்" - என்று கூறியவாறே ஆயிரம் உருவாத் தாள்கள் நூறு கொண்ட பணக்கட்டொன்றைக் கொடுத்தார் கந்தப்பர்!. அன்றே கடனை அடைத்தேன். என் இல்லத்தில் ஒருவாரம் உண்டுறைந்தார் கந்தப்பர். "நாளை நான் சென்னை செல்கிறேன். நீங்கள் ஒருகாரியம் செய்ய வேண்டும். என்னிடம் ஓர் இலக்கம் உருவா பெற்றுக்கொண்டதை 20 உருவா முத்திரைத்தாளில் எழுதிக்கொடுக்க வேண்டும். அதோடு, உங்கள் ஆயுள்காப்பீட்டு ஆவணத்தையும் பிணையாகக் கொடுக்கவேண்டும். தொகையைத் திருப்பிக்கொடுத்தபின் ஆவணங்களை மீளப் பெற்றுக் கொள்ளுங்கள்". "தொகையைக் கொடுக்கும் முன்பே இதனைக் கூறியிருக்கலாமே ஐயா...." என்றவாறே அவர்கேட்ட ஆவணங்களைக் கொடுத்தேன். அவரும் சென்னை சென்றார்! (தொடரும்) |