விழுங்கவரும் இனக் கடல்கோள்

பேரா.ம.இலெ.தங்கப்பா

உலகம் முழுவதிலும் மக்கள் ஒரு நாட்டிலிருந்து வேறுபல நாடுகட்குச் சென்று அலுவல் பார்ப்பது, வாழ்வது என்பது காலத்தின் கோலமாகிவிட்டது. குறிப்பாக ஆசிய ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து மக்கள் வயிற்றுப் பிழைப்புக்காக ஐரோப்பிய நாடுகட்கும் அமெரிக்காவுக்கும் செல்வது மிகுதியாகிக் கொண்டு வருகின்றது. இதனால் ஐரோப்பிய அமெரிக்க நாடுகள் கீழை நாட்டு மக்களின் உள்வரவுகளைக் கட்டுப்படுத்தச் சட்டங்களைக் கடுமையாக்கிக் கொண்டு வருகின்றன. கடவுச் சீட்டு, நுழைவுச் சீட்டுப் போன்றவற்றின் கட்டுப்பாட்டோடு, குடிபெயர்வு தொடர்பான அவர்களின் சட்டங்களும் விதிமுறைகளும் வேறின மக்கள் தங்கள் நாடுகளில் அளவுக்கு மீறிக் குடியேறிவிடாமல் தடுத்து நிறுத்துகின்றன.

அந்தந்த நாட்டில் அந்தந்த மொழியே ஆள்கின்றது. அதைக் கற்றுக் கொள்ளாதவர்கள் அங்கே சென்று வாழமுடியாது; அலுவல் பார்க்கமுடியாது. மேலும் ஒரு நாட்டினுள் வெளிநாட்டினர் நுழைந்து நிலம், சொத்து வாங்குவதைக் கட்டுப்படுத்தவும் சட்டங்கள் உள்ளன. அந்தந்த நாடு அந்தந்த நாட்டு மக்கட்கு உரிமையா யிருப்பதில் எந்தக் குற்றமும் இல்லையே.

இந்தியாவில்தான் நிலை தலைகீழாயிருக்கின்றது. வெள்ளைக்காரன் போனபின் பல்வேறு தனித்தனி நாடுகளாகப் பிரிந்திருக்க வேண்டிய இந்தியத் துணைக்கண்டம் வெள்ளைக்காரனின் ஆட்சி முறையைப் பின்பற்றி ஒரே நாடாக ஆக்கப்பட்டுவிட்டது. நாடு ஒன்றாக அறிவிக்கப்பட்டாலும். மக்கள் பல்வேறு மொழியினர். பல்வேறு இனத்தினர் ; பல்வேறு பண்பாட்டினர், வழிவழியான தனி வரலாற்றினை உடையவர். இதனைக் கருத்தில் கொள்ளாமல் இருக்க முடியாது என்பதால்தான் வெள்ளைக்காரன் காலத்து மாகாணங்கள் பின்பு மொழி வழி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டன. இருந்தாலும் அரசியல் அமைப்பின்படி ஒரே நாடாக இருப்பதால் இந்தியக் குடிமக்கள் என்பவர்கள் இந்தியாவின் எந்த மூலையிலும் சென்று வாழலாம். வீடு, நிலம் சொத்து வாங்கிக்கொள்ளலாம் - ஏன் சுரண்டவும் செய்யலாம். இதுதான் இன்றைய நிலை. ஆயினும் தமிழ்பேசும் தமிழ் நாடு, புதுவை ஆகிய இரண்டு மாநிலங்களைத் தவிர வேறு மாநிலங்களில் மொழி ஒரு பாதுகாப்பாக இருந்து வருகின்றது. அந்தஅந்த மாநிலத்தில் அந்த அந்த மொழி கட்டாயம். அம்மொழி அறியாதவர்கள் அம்மாநிலத்தில் போய் வேலை பார்க்கவோ, கல்வி கற்கவோ முடியாது. மண்ணின் மைந்தர்க்கே வேலை வாய்ப்பில் முன்னுரிமை என்பது அங்கெல்லாம் எழுதாச்சட்டமாக இருந்து வருகின்றது.

ஆனால் தமிழ் நாட்டிலும், தமிழே ஆட்சி மொழி எனச் சட்டமியற்றி வைத்துள்ள புதுவையிலும் மட்டும் அதிகாரத்தில் வீற்றிருக்க வேண்டிய தமிழ் அடிமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஆள்பவர்களின் பச்சையான- வடிகட்டின மடத்தனத்தாலும், மக்களின் மிகமிகக் குருட்டுத்தனமான அறியாமையினாலும் ஆங்கில வழிக் கல்வி வாணிகர்களின் வல்லாண்மையாலும் இம்மாநிலங்களின் தாய்மொழி ஆகிய தமிழ் புறக்கணிக்கப்பட்ட நிலையில் கிடந்துழல்கின்றது.

எவரும் இங்குத் தமிழைப் படிக்காமலேயே பட்டம் பெறலாம், பதவியும் பெறலாம், ஏன், தமிழன் முதுகில் குதிரையும் ஏறலாம் என்ற நிலை இங்கு இருந்து வருகின்றது. இதோடுகூட, உலகின் முதல் மாந்தன் தமிழன் என்பதை மெய்ப்பிக்கும் வகையில் தமிழன் குருதியில் இயல்பாகவே இல்லாமற் போய்விட்ட இன மொழிக் காப்புணர்ச்சியும் (அதவாது இனமொழி உணர்ச்சி இன்மையும்) சேர்ந்து தமிழ் நிலத்தைத் திறந்த வீடாகவும், கண்ட நாய் கழுதைக் கெல்லாம் வேட்டைக் காடாகவும் ஆக்கிவைத்திருக்கிறது.

கடுகளவு கூட மொழி, இன உணர்ச்சியற்றுத்தங்கள் சொந்தச் சுரண்டல்களை நடத்துவது ஒன்றே குறியாயிருக்கும் அரசியல் வாணர்கள் ஆட்சியாளர்கள் நேர்மை பிறழ்வதால் தங்கட்குக் கிடைக்கும் தரகுகள், கழிவுகள், பங்குகள், ஊதியங்களை மட்டுமே கருத்திற்கொண்டு, இந்த மண்ணின் மைந்தர் உரிமைகளைப் பாதுகாவாமல், உள்ளே வந்து நுழையும் வேற்றுமொழிக்காரர்கட்கே எல்லா வாய்ப்புகளையும் சலுகைகளையும் வாரி வாரி வழங்குகின்றனர்.

தன் ஆயுதமும் தன்கைப் பொருளும் பிறன் கையில் கொடுக்கும் பேதையும் பதரே எனபதற்கிணங்கவும்,

ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை (குறள் 837)

என்பதற்கிணங்கவும், உயர் அலுவல்கள் எல்லா வற்றிலும் வேற்று மொழிக்காரரை அமர்த்திக்கொண்டும், தமிழக நலனுக்குரிய காவிரி நீர்ப் பங்கீடு, முல்லைப்பெரியாறு, பாலாற்றில் அணைகட்டுதல் ஒகனேக்கல் உரிமை போன்ற சிக்கல்களில் தமிழரல்லாத, தமிழருக்கு எதிரான அவ் வதிகாரிகளின் அறிவுரைகளைக் கேட்டுக்கொண்டும் முழுக்க முழுக்க மக்கள் நலத்துக்கு எதிராகவே ஆட்சி நடத்துகின்றனர்.

விதிமுறைகட்கு மாறாகத், தொழிற்சாலைகள் நடத்துவதற்கும், நிலம் வாங்குவதற்கும் உள்ளே நுழையும் வேற்றுமொழிக்காரருக்குத் தமிழ் நாட்டிலும் சரி, புதுவையிலும் சரி, தடையும் கிடையாது, தடுப்பும் கிடையாது. நினைத்தவன் இங்கே நினைத்த இடத்தில் நிலம் வாங்கிக் கொள்ளலாம். தொழிற்சாலை அமைக்கலாம், விதிமுறைகளைப் பின்பற்றத் தேவையில்லை. கவனிக்க வேண்டியர்களைக் கவனித்துக்கொள்ள வேண்டும். அவ்வளவுதான்.

காலங்காலாமாக ஏழை எளிய மக்கள் வாழ்ந்துவந்த இடங்களையும் அவர்களின் வேளாண்மை நிலங்களையும் அடாவடித்தனமாக, அல்லது கண்துடைப்பு விலையில் ஆட்சியாளர் பறித்து வெளிமாநில வாணிகர், முதலாளிகள் கையிற் கொடுக்கின்றனர். மக்கள் மீது ஈவிரக்கமற்ற அரசின் இத்தகைய தான்தோன்றித் தனமான அடாச் செயல்களால் சொந்த மண்ணை இழந்து தவிக்கும் எளிய மக்கள் வரவரப் பெருகிக் கொண்டு வருகின்றனர்.

(தொடரும்)