கோடி கோடிப்பொன் கொள்பெருஞ் செல்வர்க்குக்
குடியி ருக்கவோர் மாளிகை பஞ்சமோ?
நாடு தச்சுக் கலைஞரை ஏவினால்
நாளில் மாளிகை நாலைந்து கட்டலாம்
நீடு சோம்பலால் மூளை மழுங்கியே
நெளிந்தும் கெஞ்சியும் வேற்றவன் கொல்லையில்
வீடு வாடகைக் கேபெறல் வாழ்க்கையோ?
வெட்கம், வெட்கம்! விளம்பொணா வெட்கமே!
ஓங்கு சொல்வளம் உண்மைசேர் நுண்மொழி
உயர்த மிழ்தனில் கல்வி அனைத்தையும்
தீங்கி லாமலே கற்றிட ஓர்வழி
செய்கி லாதவர் தாம்கல்வி யாளரோ?
ஆங்கி லப்பெயர் வாடகை வீட்டினை
அமர்த்தி அங்குநம் பல்கலை மூடர்கள்
தூங்க லன்றிவே றென்செயல் செய்தனர்?
தூ,தூ, வெட்கம்! இவர்செயல் வெட்கமே!
- பேரா. ம.இலெ.தங்கப்பா