
|
வினாதலும் விடுத்தலும்
1. அ) ஐம்பால் என்றால் ஐவகையாகப் புனைதலுடைய மகளிர் கூந்தலைக் குறிக்கும் என்கின்றனர். ஒவ்வொரு வகைப் புனைதலுக்கும் பெயருண்டா? அப்பெயர்கள் யாவை? ஆ) இரவில் மலர்வது அல்லி. அல் - இதைனைக் குறிக்கிறது எனவே அல்லில் மலர்வது அல்லி என்று எழுதுவது சரியா? விளக்க வேண்டுகிறேன்.
அ) சுருள், கொண்டை, பனிச்சை, குழல், முடி என்பவையே ஐம்பாலாம். ஆ) அல்லில் மலர்வது அல்லி என்பது சரியே- ம.இலெ.த. 2. அ) செருமனியைச் சேர்ந்த பேராசிரியை உல்ரைக் நிக்கோலசு தொல்காப்பியத்தில் 12ஆம் நூற்றாண்டுக்குப்பிறகு சமற்கிருதம் புகுத்தப் பட்டுள்ளது. அதனால் கருத்துகள் உண்மையானவையா? என்பது ஐயமாக இருக்கிறது என்று கூறியுள்ளாரே அதுபற்றி ... (தினமணி, ஞாயிறு கொண்டாட்டம் 23-3-2008) ஆ) கிருஷ்ணமூர்த்தி என்பதைக் கிருட்டினமூர்த்தி கிருட்டிணமூர்த்தி என நற்றமிழில் எழுதப் பார்க்கிறோம். நண்பர் ஒருவர் தம்பெயரைக் கிருஃச்ணமூர்த்தி என்று எழுதியுள்ளார். இவற்றில் எது சரியான தமிழ்ப்பெயர்?
அ) இந்த ஐயம் முறையானதே. 12ஆம் நூற்றாண்டு என்ன? தொல் காப்பியத்துக்கு முந்திய காலத்திலேயே தமிழில் வடசொற்கள் புகுத்தப்பட்டுள்ளன. அதனால்தான் தமிழில் வடசொல்லைச் செய்யுட் சொல்லாக ஏற்றிருக்கிறார் தொல்காப்பியர் (தொல் 880, 884) வடவர் கருத்துகளும் புகுத்தப்பட்டுள்ளன. மேலோர் கீழோர் என்ற மக்கட்பாகுபாடுகள், அவரவர்க்குரிய ஒழுக்கங்கள் (975-979) 1099, 1574, 1577, 1578 1574) கூறப்படுவது இவ்வையம் எழச்செய்கின்றது. ஆ) க்ருஷ்ணமூர்த்தி என்ற சமற்கிருதச் சொல்லைக் கிருட்டினமூர்த்தி. கிருட்டிணமூர்த்தி என்று தமிழில் வட சொல்லாகப் பெய்வது தொல்காப்பியர் முதலிய சான்றோர்கள் ஏற்றுக்கொண்டதே. ஆனால் கிருஃச்ண மூர்த்தி என்று எழுதுவது மரபறியார் செயல். ஷ் என்ற சமற்கிருத ஒலியை அம்மொழியில் உள்ள படியே ஒலிக்க விரும்பும் வேட்கையால் செய்த எழுத்தாக்கம் இது. தமிழ் இலக்கணம் இதை ஏற்காது. - இரா. தி. 3. யாப்பிலக்கணத்தில் பரிபாடல் என்றே யாப்பு வகை உளதோ? அப்படி உளதெனில் அதன் யாப்பிலக்கணம் யாது?
பரிபாடல் என்பது இசைப்பாவகை. செப்பலும் துள்ளலும் இன்றி இடைநிகர்த்த ஓசையுடையது என்பர். இது கலிப்பாவைப் பெரிதும் ஒத்தது. கடவுள் வாழ்த்து, மலைவிளையாட்டு புனல்விளையாட்டுகள் காமம் கருதியதியனவாக இப்பாடல் பாடப்பெறும். இவ்வாறு அமைந்த சங்கநூல் எட்டுத்தொகையுள் ஒன்றாகிய பரிபாடல். வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்னும் இயற்றமிழ்ப் பாவகை நான்கிற்கும் இலக்கணம் கூறிய பிற்காலத்து யாப்பருங்கலம் முதலிய யாப்பிலக்கணநூல்கள் இசைப்பாடல் வகைகளைத் தாழிசை, துறை, விருத்தம் என்னும் பாவினைங்களாகப் பாகுபடுத்தின. பரிபாடலும் இசைப்பாவாதலால் விட்டுவிட்டன. தொல்காப்பியர் இதற்குப் பின்வரும் இலக்கணங்களைக் கூறுகிறார் : இது கலியுறுப்புப் போலாது நான்கு பாவானும் வந்து பல அடியான் நிகழும். இன்ன பா என்று கூறப்படும் இயல்பின்றி எல்லாப் பாவுக்கும் பொதுவாய் நிற்கும். கொச்சகம், அராகம் சுரிதகம், எருத்து ஆகியன உறுப்பாக வரப்பெறும். அதன்கண் சொற்சீர்அடியும் முடுகியல் அடியும் வரும். (தொல் 1377,1378,1379)- இரா. தி. 4. அ) பொருப்பு - பொறுப்பு என்னும் இருசொற்களுக்குமுரிய வேறுபாடு ஏற்கெனவே தெளிதமிழில் வெளியிடப்பட்ட தாக நினைவு. பொறுப்பேற்கிறேன், பொறுத்தருளுமாறு என நீங்களே இத்திங்கள் தெளிதமிழில் எழுதியுள்ளீர்கள். விளக்க வேண்டுகிறேன். ஆ) சென்ற இதழ் மாணாக்கர் பரிசு திட்டம் 131இன் விடையில் செய்யவள் + தவ்வயை என்ற அளவில் பிரிக்கப்பட்டிருக்கிறது தவ்வையை என்பதைத் தவ்வை+ஐ எனப் பிரித்தல் கூடாதா? பிரித்தல் தேவையற்றது எனக் கருதினால், தெவ்வோர் என்பதை மட்டில் தெவ்+ஒர் எனப் பிரித்தல் வேண்டுமா? இரண்டும் பெயரை ஒட்டிய இடைச்சொற்களே. ஒன்றைப் பிரித்தும் பிறி தொன்றைப் பிரியாமலும் எழுதுவது பற்றி விளக்க வேண்டுகிறேன். அவற்றைப் போலவே பக்கத்துள் - பக்கம் + அத்து+உள், அற்றால்- அற்று +ஆல் எனவும் பிரித்தல் தவறா?
அ) உங்கள் வினாச் சரியாக விளங்கவில்லை. அதைப் பொருத்த வரையில், அதைப் பொறுத்தவரையில் இந்த இரண்டில் எது சரி என்பதே ஏற்கெனவே தெளிதமிழில் வந்த விளக்கம். பொறுப்பு ஏற்கிறேன் என்று சென்ற தெளிதமிழில் எழுதியது ஒரு செயல் செய்தலைச் செய்தற்கு உரிமை என்னும் வேறு பொருள் தரும், பொறுத்தருளுதல் என்பது மன்னித்துக்கொள்ளுதல் என்ற பொருளைத்தரும். ஆ) புத்தேணாடுண்டோ என்பதைப் புத்தேள்+நாடு+உண்டோ என்று பிரித்துக்காட்டிய பகுதி அச்சாகாமற்போனது பிழைதான். தவ்வையை என்பதைத் தவ்வை+ஐ என்ப் பிரித்தல் தேவையற்றதுதான். 639 ஆம் குறளில் வரும் தெவ்வோர் என்பது பகைவர் என்ற பொருள்தரும் ஒரு சொல்லின் ஓர் என்ற இறுதிநிலை அன்று. தெவ் + ஒர் என்பதில் தெவ்= பவைர்; ஒர் = ஒரு (என்னும் எண்ணும்பெயர்) அதனால் இப்படித்தான் பிரிக்கவேண்டும். தெவ்வோர் (பனகவர்) என்று ஒரு சொல்லாகக்கொள்ளலாகாதா என்றால், உறும் என்ற செய்யும் என்ற முற்றானது பல்லோர் படர்க்கையில் செல்லாது. - இரா. தி. |