கடைக்கழக இலக்கியங்களில்
வடுகர் என்போர் கலிங்கர்

பேராசிரியர் இரா. மதிவாணன்

வடுகர் என்னும் சொல் தெலுங்கரைக் குறிப்பதாக இதுவரை கருதப்பட்டு வந்தது. தெலுங்கு அறிஞர்களும் சங்க இலக்கியங்களில் வடுகர் பெயர் இடம்பெற்றிருப்பதால் தெலுங்கு மிகவும் தொன்மையான மொழி எனவும் தவறாகப் பேசத் தொடங்கிவிட்டனர். ஆனால் இச்சொல் கலிங்க நாட்டாரைக் குறித்த சொல் என்பது கண்டறியப்பட்டுள்ளது. கலிங்கத்துப் பரணியில் செயங்கொண்டார்.

மழலைத்திரு மொழியில்சில வடுகும்சில தமிழும்
குழறித்தரு கருநாடியர் குறுகிக்கடை திறமின் (கடைதிறப்பு 43)

எனப் பாடியுள்ளார். இதில் வடுகு என்பது தெலுங்கைக் குறித்த சொல்லாக ஆளப்பட்டுள்ளது. கலிங்கப்போர் நடந்த குலோத்துங்க சோழன் காலத்தில் தெலுங்கு கன்னடம் ஒரியா ஆகிய மூன்று மொழிகளும் பேச்சு மொழிகளாக வளர்ந்திருந்தன. இருப்பினும் தெலுங்கர் எக்காலத்திலும் தம்மை வடுகர் என அடையாளப் படுத்திக் கொள்ளவில்லை.

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கடைக்கழக இலக்கியக் காலத்தில் கன்னடம் தெலுங்கு போன்ற மொழிகள் தோன்றவில்லை. ஆந்திர சாதவாகன மன்னரின் பேச்சுமொழி பிராகிருதமாக இருந்தது. ஒரிசா எனப்படும் கலிங்க நாட்டில் பாலியின் கிளைமொழி பேசப்பட்டது. சாதவாகனரின் பிராகிருதமும், கலிங்கரின் பாலியும் பேசப்பட்ட நிலப்பகுதிகளே "மொழிபெயர் தேயம்" எனப் பண்டைத் தமிழிலக்கியங்களில் குறிக்கப் பட்டன. ஆந்திர கருநாடகப் பகுதிகள் அக்காலத்தில் கொடுந்தமிழ் நாடுகளாக இருந்தன.

ஒரிசா எனும் கலிங்கத்திலிருந்து ஆந்திரத்தில் குடியேறிய வடுகர் கல்லுடைக்கும் தொழிலினர். இவர்கள் பேசும் தெலுங்கு நீட்டி முழக்கும் அடித் தொண்டைப் பேரொலி கொண்டதாக இருப்பதை இன்றும் காணலாம். இவர்களின் முன்னோர் பேசிய கலிங்கத்துப் பாலிமொழியும் இத்தகையதே. அதனால் இவர்கள் கல்லாநீள் மொழி வடுகர் எனப்பட்டனர். வ-ப (ba) ஆவது பாலி மொழியின் இயல்பு, வாவி எனும் தமிழ் சொல்லைப் பாவி (bavi) எனத்திரித்துப் பேசியவர்களும் இவர்களே.

புல்லி என்னும் குறுநில மன்னன் ஆட்சி புரிந்த வேங்கடமலைக்கு வடக்கேயிருந்த ஆந்திரப் பகுதியில் கோதாவரி வரை தமிழ் பேசப்பட்டது. மேற்கு கோதாவரிப் பகுதியிலும் கலிங்கத்திலும் பிராகிருத பாலி மொழிகள் பேசப்பட்டன. வேங்கடமலை என்னும் குறிப்பை அகநாநூற்றில் மாமூலனார் வெளிப்படுத்தி யிருக்கிறார். வேங்கடமலைக்கு அப்பால் பல்லான் கோவலர் ஆடுமாடுகளை மேய்ப்பவராகவும், நல்லவர் களாகவும் இருந்திருக்கின்றனர் என்பதை

........................................... "மாதிரம் வெம்ப
வருவழி வம்பலர் பேணிக் கோவலர்
மழவிடை பூட்டிய குழாய்த் தீம்புளி
செவியடை தீரத் தேக்கிலை பகுக்கும்
புல்லி நன்னாட்டு உம்பர் செல்லருஞ்
சுரம் இறந்து ஏகினும் நீடலர்" (அகம். 311)

என்னும் வரிகளில் மாமூலனார் குறிப்பிடுகிறார். மூங்கில் குழாய்களில் கொணர்ந்த கூழை வழிப்போக்கர்க்குத் தந்த களைப்பைப் போக்கிய செய்தியும் கூறப்படுகிறது.

புல்லியின் வேங்கடக் குன்றத்துக்கு வெகு தொலைவுக்கு அப்பால் கலிங்க நாட்டுக்குச் செல்லும்போது வழிப்பறிக் கள்வராகிய வடுகர் இருந்ததை

............................................. "புல்லி குன்றத்து
நடையருங் கானம் விலங்கி நோன்சிலைத்
தொடையமை பகழித் துவன்று நிலை வடுகர்
பிழியார் மகிழர் கலிசிறந் தார்க்கும்
மொழி பெயர் தேஎம் இறந்தனர் ஆயினும்" (அகம். 295)

என மாமூலனார் குறிப்பிட்டுள்ளார். கங்கை வரை பண்டங்களை ஏற்றிச்செல்லும் சாத்து வணிகர் கூட்டத்தொடு, அல்லது படைத்துணை மறவரொடு வடதிசை நோக்கிச் சென்ற தலைவனைக் குறித்துத் தலைவி வருந்தும் பாலைப் பாடல்களில் மிக நீண்ட தொலைவு பறக்கும் கழுகுபோல் நெடுந்தொலைவு கடந்த செய்தி கூறப்படுகிறது. பல மலைகளைக் கடந்த பின்னரே வேற்றுமொழி பேசும் நிலப் பகுதி இருந்தது எனவும் மொழி பெயர் தேயங்களாகிய அப்பகுதிகள் மூவேந்தர் ஆட்சிக்கு உட்பட்டிருந்தன என்றும் கூறப்பட்டுள்ளது.

கண்உமிழ் கழுகின் கானம் நீந்தி
........................................................
தமிழ்கெழு மூவர் காக்கும்
மொழிபெயர் தேஎத்த பன்மலை இறந்தே (அகம். 31)

வடபுலத்திலும் மூவேந்தரின் அரசிளங்குமரர்கள் ஆட்சி புரிந்ததைப் பாரத இராமாயணங்களும் குறிப்பிடுகின்றன. கி.மு. ஏழாம் நூற்றாண்டு வரை வடநாட்டில் தமிழ் மன்னர்களின் ஆட்சி நிலவியதை உதயணன் பெருங்கதையாலும் அறியலாம்.

வடபுலத்தில் கி.மு. நான்காம் நூற்றாண்டு அளவில் ஆட்சி புரிந்த மோரியர் தென்னாட்டின் மீது படையயடுத்தனர். அப்போது கலிங்க நாட்டிலிருந்த விற்போர் மறவர்களாகிய வடுகரைத் துணைக்கு அழைத்து வந்தனர் என்பதை மாமூலனார்

முரண்மிகு வடுகர் முன்னுற மோரியர்
தென்திசை மாதிரம் முன்னிய வரவிற்கு ( (புறம். 281)

தெளிவுறப் பாடியுள்ளார். மோரியர் பாடலி புத்திரத்தில் இருந்து புறப்பட்டு கலிங்கத்தில் வடுகர் துணைபெற்றனர். ஆந்திரத்து சாதவாகனர் எப்பொழுதும் தமிழர்க்கு நண்பர்களாகவும் உறவினர்களாகவும் இருந்தனர். எக்காலத்திலும் சாதவாகனர்கள் தமிழரைப் பகைத்ததில்லை. எனவே வடுகர் என்னும் சொல் ஆந்திரரைக் குறிக்கவில்லை. வடுகரைக் 'கல்லா நீள்மொழிக் கதநாய் வடுகர்' எனக் குறிப்பிட்டுள்ளார். இவர்கள் ஆறலை கள்வராக விந்தியமலைச் சாரல் பகுதிகளில் வாழ்ந்தவர்கள். வடுகர்களைக் குறித்து தாயங் கண்ணனார், சேந்தங் கொற்றனார், இளம் கௌசிகனார் ஆகிய புலவர்களும் பாடியுள்ளனர்.

தெலுங்கர் தம்மை ஆந்திரர் எனக்குறிப்பதன்றி வடுகர் என எக்காலத்திலும் கூறியதில்லை. தெலுங்கு அகராதிகளிலும் வடுகர் என்னும் சொல் தெலுங்கரைக் குறிக்கவில்லை. கலிங்க நாட்டைத் தமிழில் "ஒட்டர நாடு" என்பர். கலிங்கர் தம் மொழியை "ஒடியா மொழி" என்கின்றனர். இச்சொல் ஆந்திர நாட்டில் வட்டெ (Vadde) என வழங்கும். கிணறு வெட்டுதல், கல்லுடைத்துக் கட்டடம் கட்டுதல் ஆகிய பணிகளுக்கு இவர்கள் ஆந்திர நிலத்தில் குடியேற்றப்பட்டனர். இவர்கள் மொழியும் தெலுங்காக மாறிக் கலிங்கத்துக் கல்லுடைக்கும் தொழிலாளார் சிறந்த வில்லாளிகளாக இருந்த ஆறலை கள்வரின் வழிவந்தவர்கள் என்பதன் வடிகாடு என்னும் சொல் நாளடைவில் மிகுந்த துணிச்சல் உள்ள போர்மறவனைக் குறித்த சொல்லாயிற்று வடிகாடு என்னும் சொல் 'வடுகுடு' எனத் தெலுங்கில் திரிபுற்றது. வடுகண்டு-வலிமை சான்ற இளைஞன் வடுக்கு - முறுக்கு, வடிகலதனம்- வீரம், வட்டெகாடு ஒரியா மொழி பேசுபவன், வட்டெழு-ஒரியாமொழி.

கன்னடத்திலும் வட்டெ (Vadde) எனும் சொல் கல்லுடைக்கும் தொழிலாளியைக் குறித்தது. கலிங்கத்து மொழியில் ஒடியா என்றே இம்மக்கள் அறியப்பட்டனர். தமிழில் ஒட்டன் என இக்காலத்தில் வழங்கினும் பழங்காலத்தில் கலிங்கர் 'உடியர்' என்றே அறியப்பட்டனர். அதனால் கடைக்கழகக் காலத்தில் இவர்களுக்கு உடியர்-வடியர்-வடுவர்-வடுகர் எனத் தமிழ்ப் பெயரிட்டனர். உடை-உடி எனும் சொற்கள் உடைத்தலையும், தாக்குதலையும் குறிக்கும். உளிதல் என்னும் சொல்லும் வெட்டுதலைக் குறிக்கும். உளி-உடி-வடி உனத்திரியும். வடித்தல் கல்லைச் செதுக்கி வடிவமைத்தல் எனப் பொருள் தரும். கடிப்பு என்பது ஓர் காதணி. இது கடுக்கன் எனத் திரிந்ததைப் போன்று வடிகன்-வடுகன் எனத் திரிபுற்றது.

வடக்கிலிருந்து வந்தவன் வடுகன் என்பதும் பொருந்தாது. வடக்கு-வடுக்கு எனத்திரியாது. குடக்கு-குடுக்கு எனத்திரியவில்லை. சொற்களின் ஒலிப்புத் திரிபுகள் குறிப்பிட்ட ஒழுங்கைப் பின்பற்றுகின்றன. ஒரு சொல் எப்படியயல்லாம் திரியும் எப்படியயல்லாம் திரியாது என்னும் சொற்பிறப்பு நெறிமுறைகளை ஊன்றிக் கவனித்தால் சொல்திரிபுகளும் பொருள்திரிபுகளும் திசைமாறிப்போகாமல் உண்மையான பொருளை உணர்த்தும்.

மெல்-மெழு-மெழுகு மென்மைப் பொருளில் திரிந்தது போன்று வல்-வழு-வழுதி எனும் சொல்வன்மை வாய்ந்த பாண்டிய மன்னர்க்குப் பெயராயிற்று. வல்-வழு-வடு என்றும் சொல் போர்மறவனுக்கும் இளைஞ னுக்குப் பெயராகி வடமொழியில் வட (Vata) என்றும் ஒரியாவின் மூலமொழியாகிய பாலியில் உடி-வடி என்றும் திரிந்தது.

(தொடரும்)