தொல்காப்பியத்துட் கண்ட தலைவன் - தலைவியர்
புலவர் தி. சா. கங்காதரன், புதுச்சேரி(தொடர்ச்சி)

'புணர்ந்துடன் போகிய கிழவோள் மனையிருந்து
இடைச்சுரத்து இறைச்சியும் வினையும் சுட்டி
அன்புறு தக்க கிளத்தல் தானே
கிழவோன் செய்வினைக்கு அச்ச மாகும்'

தலைவி மடன் உடையளாயினும். தலைவன் பரத்தையிற் பிரிந்து வந்து தனக்குப் புறத்தொழுக்கம் யாதுமின்றென்று வலியுறுத்திக் கூறுமிடத்தும் அங்ஙனம் பொய்யாகத் தன் தவற்றை மறைத்துக் கூறும் அவனுடன் தான் கூட்டத்தை விரும்புமிடத்தும், அவள் தனது மடன் நீங்கி அவனது களவொழுக்கத்தைச் சான்று காட்டி வெளிப்படுத்துவாள் (305).

தலைவி தலைவன் என இருவர்க்கும் ஆகா எனக் கடியப்பட்ட மெய்ப்பாடுகளுள் சினன், பேதைமை, பொறுத்துக்கொள்ளும் தன்மையின்மை வறுமையென்பன நான்கும் தலைவி தலைவன்பால் கொண்டுள்ள உண்மைக் காதலைச் சிறப்பித்துக் கூறுமிடத்தே அவள்கண் நிகழும் (245).

'சினனே பேதைமை நிம்பிரி நல்குரவு
அனைநால் வகையும் சிறப்பொடு வருமே'

தலைவி தன் சுற்று வட்டாரம் தவிரப் பிற இடங்களில் பயின்றறியாதவள் (301), கிழவி சொல்லின் அவளறி கிளவி, இல்லிருந்து நல்லறம் செய்து தெய்வமஞ்சி, அருளும் அன்பும் கொண்டு, தலைவன் பிரிவினையும் அவனைப் பற்றி அயலார் கூறும் பழிமொழிகளையும் அஞ்சி வாழ்பவள் அவன் பிரிந்த காலத்தே இன்பத்தை வெறுத்துப் பசியட நின்று பசலை பாய்ந்து உண்டியிற் குறைந்து உடம்பு நனிசுருங்கிக் கண்துயில் மறுத்துக் கனவொடு மயங்கித் தடுமாறுபவள் (270).

எத்துணைப் பயின்றுவைத்தும், தலைவி தன் வேட்கையைத் தலைவன் முன் கூறாள்; புதுமட்கலத்து நீர் புறம் பொசிந்து காட்டுமாறு போல, அவளகத்து வேட்கை தலைவனுக்குப் புலப்படும் (118).

'தன்னுறு வேட்கை கிழவன்முற் கிளத்தல்
எண்ணுங் காலைக் கிழத்திக் கில்லை
பிறநீர் மாக்களின் அறிப. ஆயிடைப்
பெய்ந்நீர் போலும் உணர்விற் றென்ப'

இளமைப்பருவம் கழிந்து ஒப்படைந்த காலை, தலைவன் போலவே தலைவியும் இல்லற இன்பங்களிற் பற்றறுத்து, அவனோடு வீடுபேற்றிற்குரிய வினைகளை மேற்கொள்வாள் (192).

'அடியோர் பாங்கினும் . . . புலவர்'
வேட்கை மறுத்துக் . . . மொழிப'

களவுக்காலத்தே தலைவன் தலைவியிடமோ தோழியிடமோ கூறாமல், அரசனாணையை மேற்கொண்டு பிரிந்து சென்றவழி, அவன் தன்மேல் அன்பின்றித் தன்னை நிலையாகக் கைவிட்டுவிட்டான் என்ற எண்ணம் தலைவிக்குத் தோன்றுதலின், அவள் 'தேறுதலொழித்த காமத்து மிகுதிற த்தளாகி. மடன் வருத்தம் மருட்கை மிகுதி என்னுமிவை தன்னைக் கையிகந்தன போலக் கூறும் பெருந்திணைநிலையினை எய்தப் பெறுவாள்' (236). தலைவன் மீளவே அந்நிலை நற்காமமாகிய ஐந்திணையைச் சாரும்.

'பொழுது தலைவைத்த கையறு காலை
இறந்த போலக் கிளக்கும் கிளவி
மடனே வருத்தம் மருட்கை மிகுதியொடு
அந்நாற் பொருட்க ணிகழு மென்ப'

இவ்வாற்றால், தொல்காப்பியத்திற்கண்ட அகனைந்திணைத் தலைவன் தலைவி என்னுமிருவர்தம் திறத்தையும் இருவகைக் கைகோளுள்ளும் நூற்பாச் செய்தியின் மிக இகவாது ஒருவாறு கண்டோம்.

தலைவன் கற்புக்காலத்தே பரத்தையிற் பிரிவு மேற்கோடல் அவனது பெருமைக்கு இழுக்குப் பயக்கிறது, புதல்வனை ஈன்ற தலைவி யிருப்ப, மற்றொருத்தியை அவளது இளமை கருதிப் பின்முறை வதுவை மனைவியாக்கோடலும் ஒரு மாசுபடவே அமைகிறது. "அன்பிலை. கொடியை !" என்றெல்லாம் தோழி அவனது இயற்பழிப்பவும் (158) அவை இடன் செய்கின்றன. ஆயின் தனது பரத்தைமை கருதி அவன் கழிவிரக்கம் காட்டியவிடத்தும் (173), பின்முறை வதுவைக் கிழத்தியும் தலைவியும் ஒற்றுமை கொண்டு உடனுறைதலும் அப்பின்முறைக் கிழத்தி தலைவி புதல்வன்பால் அன்பு பாராட்டலும் கண்டு. இத்தகு மாசற்ற காதலரை நீங்கித் தான் பரத்தையிற் சேறல் அடாதெனத் துணிந்து அப்பரத்தையர் தொடர்பினை அறவே நீத்தவிடத்தும் (172) அவன்பால் பண்டிழந்த பண்பு வந்தியைதலைக் கண்டு அவனது முன்னைத் தவற்றினை வழுவமைதியாகவே கருதற்பாலம். பிற பலவாற்றானும் அவன் நிறைவு வெளிப்படை.

இனித் தலைவிபால் மாண்பு பலப்பல. அவை அவளைத் தலைமகனின் மிக்காளாகவே காட்டுவன. உயிரினும் சிறந்த நாணினையும் தன் கற்புக்காரணத்தால் துறந்து தலைவனோடு உடன்போக்கிற்கு இசைந்தவள். இடைச்சுரமருங்கின் வழக்கியல் ஆணை கிளந்து செல்லும் (506) அவனது நற்றுணை யொன்றனையுமே துணிந்து, தன்குரவரையும் பிற தமரையும் பாங்கையும் நீங்கிச் செல்கிறாள். மனை வாழ்க்கைக்கண் தலைவனது பரத்தைமை கண்டு பெருந்துயருற்றவள், அது குறித்து அவன் கழிவிரக்கங் காட்டவே தாய்போல்

கழறித் தழீஇக் கொள்கிறாள் (173). மகப்பேறு வாய்க்கப்பெற்றிலாதவள், அப்பேற்றினாற் சிறப்புற்ற பின்முறை வதுவை மனைவியைத் தன்னையொப்ப மதித்து (172). `மகன்தாய் உயர்பும் தன்னுயர்பாதகும் (174) என்று கருதி ஒற்றுமையுற அவளோடு மனையறம் பேணித் தலைவனை உவப்பிக்கின்றாள். `தற்புகழ் கிளவி கிழவன்முன் கிளத்தல், எத்திறத் தானும் கிழத்திக் கில்லை (180). வினைமேற்கொண்டு பிரியலுற்ற கிழவோன். இடைச்சுரமருங்கில் அன்புறு தகுந கண்டு. தன்மேலெழும் காதலால் எடுத்த வினை முடித்தலின்றி விடுத்து மீண்டுவிடலாகாது என்பதே அவளது அச்சம் (148). தன் வேட்கையை அவன்முன் கிளத்தல் களவின்கண் யாண்டும் அவட்கு இல்லை (118). கற்பினும். 'உற்றுழி யல்லது சொல்லல் இன்மையின், அப்பொருள் வேட்கைக் கிழவியின் உணர்ப' (208).

"அன்பிலை. கொடியை!" எனத் தோழி தலைவனை இயற்பழித்தவழி அது பொறாது வேற்றுமைக் கிளவி தோற்றி ஆறுதலுறும் அவளுக்கு (159), தலைவனை வழிபடு கிழமையே இயலாவது (160). இத்தகு கிழத்தியினுடைய உயிர் நாண் மடன் என்றிவற்றைத் தலைவனும் காத்தற்குரியன் (201). பிறள் குணம் இவையெனக் கூறிக் கிழவோன் குறிப்பினை யுணர்தற்குரிய தலைவிக்கு (234). தன் நிலத்தினுள்ளும் வரையறை கடந்து இறைச்சி சுட்டும் அறிவில்லை (301) பண்டு களவின் கண்ணும், தான் செலற்குரிய வழியாகவே அமையுமிடம் பற்றியே குறியிடம் சுட்டினாள். தலைவன் குறியிடம் வகுப்பதாக மரபு இல்லை. இம்மெல்லியலாள்பால் ஒரோவழிச் சினமும் பேதைமையும் பொறாமையுணர்வாம் நிம்பிரியும் தோன்றும், வறுமை நிகழ்வது முண்டு. ஆயின் அவை இல்லற மாண்பினைச் சிறப்பிப்பனவாதலன்றி இழிக்குமாறில்லை (245). இருவகைக் கைகோளிலும் தலைவனைப் பிரிந்துழி, அவள்மாட்டு நிகழும் இன்பத்தை வெறுத்தல், துன்பத்துப் புலம்பல் முதலாய மெய்ப்பாடு இருபதும் (270) அவளது நன்மன மாண்பினையே நவிலுவன.

இன்ன நலன்களால் தலைவனினூங்குத் தலைவியே தகைசான்றாளாகத் தொல்காப்பியம் காட்டுகிறது. இவளைத் தன் கிழத்தியாக வாய்க்கப் பெற்றானாதலின், தலைவனும் மிக்கானாதல் தேற்றம். 'புகழ்புரிந்தில்லுடையார்க்(கு) உண்டே இகழ்வார்முன், ஏறுபோல் பீடு நடை' என்றலும் சாலுமன்றே! பொருளதிகாரம் பல இயல்களிடையே சிதர்ந்து கிடந்த செய்திப்பன்மையைத் தொகுத்துக் கூறிய நலம் ஒன்றன்றி, பிற பஃறிறங்களைக் காணும் வாய்ப்பு இச்சிற்றுரைக்கண் நிகழுமாறில்லை. சங்கவிலக்கியப் பயிற்சியில் ஈடுபாடு காட்டிவரும் இந்நாள், தலைவன் தலைவியர் பற்றிய துறைப்பட நிகழும் பாடல்களை ஓராற்றான் உணர்ந்துகொள்ள இக்கட்டுரை சிறு துணையாம்.

தலைவனது பரத்தையிற் பிரிவும், அதுபற்றித் தலைவி கொள்ளும் ஊடலைத் தன் பொய்ச்சூளுறவால் அவன் உணர்த்தலும் என்றின்ன திறங்கள் இந்நாள் தமிழ் கற்பாரிடைக் கற்பியற் செய்திகளைப் பயிறற்கண் வெறுப்பு விளைத்தலும் கூடும். ஒரோவொரு தலைவன் மாட்டுக் காணப்படும் புறத்தொழுக்கம் பற்றிய வழுவும் வழுவமைப்புமாக நூற்பாக்கள் செய்தி பகர்வனவேயன்றி. அப்பரத்தைமை யாண்டும் ஒருதலையாக நிகழற்பாலதே என்னும் விதிமுறை நூலுள் இல்லை. ஒரோவழி நிகழலாகும் ஒழுக்கத்தினை உளவியலாற் கண்டு, உலகியலைப் புனைந்துரைவகையால் புலனெறி வழக்கம் செய்துபோந்த சங்கவிலக்கியப் பாடல்கட்கு இலக்கண நெறியால் அரண் வகுத்துப் போந்தமையன்றி, களவின் வழிவந்த ஐந்திணைக் கற்பு நெறியைக் காட்டிப்போதலே ஆசிரியர்தம் திருவுளக் குறிப்பு என்பது தெளியப்படும்.

(முற்றும்)