தமிழ் வளர்க்கும் தாளாண்மைகள்

நாளிதழ் நடவடிக்கைகள்: சென்ற இதழில் குறித்தபடி அறக்கட்டளைக்கு வந்த நன்கொடைத் தொகை

மொத்தம் உரூ.
2,31,333
சென்ற திங்களில் வந்த தொகை:
திரு பொ. இராமராசு, கோவை. 
உரூ. 50
ஆக மொத்தம்  
2,31,383

இணையத் திங்களிதழ் "தமிழ்க்காவல்' என்ற பெயரில் உருவாகிவருகிறது. அடுத்த தெளிதமிழ் வெளியாவதற்கு முன் பார்க்கக்கூடும் என்று கருதுகிறோம். அதன் இணைய முகவரி : www.thamizhkkaaval.net என்பது, வழக்கப்படி நன்கொடைகளைத் 'தமிழ் வளர்ச்சி அறக்கட்டளை' என்ற பெயருக்குப் பணவிடையாகவோ கேட்புக் காசோலையாகவோ திரு. தி. ப. சாந்தசீலன், பொருளர், 22, உடையார் தெரு, பாக்கமுடையான்பட்டு, புதுச்சேரி - 605 008 என்ற முகவரிக்கு அனுப்புக.

இலக்கியப் பொழில் எடுத்த இருபெரு விழாக்கள்.
28.3.2008 அன்று புதுவை இலக்கியப் பொழில் இலக்கிய மன்றம் புதுவைச் செயராம் உணவகத்தில் மறுமலர்ச்சிப் பாவலர் புதுவைச்சிவம் நூற்றாண்டு விழாவும், இலக்கணச் சுடர் முனைவர் இரா. திருமுருக னாருக்குப் பாராட்டு விழாவும் என இரு பெரு விழாக்களை எடுத்தது. கலைமாமணி கோவி.கலியபெருமாள் மொழிவாழ்த்துப் பாடினார். கலைமாமணி பூங்கொடிபராங்குசம் வரவேற்புரையும், தொழில் முனைவர் பெ. பராங்குசம் தலைமையுரையும் ஆற்றினர். புலவர் கி.த.பச்சையப்பன் முன்னிலையில் பேராசிரியர் இரா.ச.குழந்தை வேலனார் நூற்றாண்டு விழாச் சிறப்புரையாற்றினார். தமிழ்க் குடிதாங்கி மருத்துவர் ச. இராமதாசு அவர்கள் புதுவைச் சிவம் படைப்புகள் என்ற நூலை அறிமுகம் செய்து, இரா. திருமுருகனார் பாராட்டு விழா மலர், அவர் உருவாக்கிய அண்ணாமலையார் காவடிச்சிந்து நூல், குறுவட்டு ஆகியவற்றை வெளியிட்டு வாழ்த்துரையாற்றினார். பேராசிரியர் ம.இலெ. தங்கப்பா மலரையும், ச.ம.உ.இரா. அனந்தராமன் காவடிச்சிந்துக் குறுவட்டையும் ச.ம.உ.குரு. பன்னீர்ச்செல்வம் காவடிச்சிந்து நூலையும் பெற்றுக் கொண்டார்கள். முனைவர் சிவ. இளங்கோ தொகுப்புரையும், ஆசிரியர் பா.பெருமாள் நன்றியுரையும் ஆற்றினார்கள்.

மருத்துவர் ஐயா இரா. திருமுருகனாரின் தமிழ்ப் பணியைப் பாராட்டித் தமிழியக்கப் பணிகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளும்படி. அவருக்கு உரூபாய் ஐம்பதினாயிரம் நன்கொடை வழங்கினார். பாராட்டு வெண்பாக்கள் வழங்கிய 80 பாவலர்களுக்கு மருத்துவர் மேலாடை போர்த்துச் சிறப்பித்தார். தமிழறிஞர் பலர் விழாவுக்கு வந்திருந்து வாழ்த்தினர்.

தெளிதமிழ் வளர்ச்சிக்காகத் தமிழ்ச் சங்கத் தலைவர் தமிழ்மாமணி புலவர் சீனி. இராமச்சந்திரன் 1005 உரூபாயும், கலைமாமணி கோவி. கலியபெருமாள் 500 உரூபாயும் நன்கொடை வழங்கினர். இரா. திருமுருகனார் நன்றியுரையில் குறிப்பிட்ட தம் வாழ்நாள் விருப்பங்கள் வருமாறு :

1. இப்போது பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரையில் இருந்து வரும் தமிழ்க்கல்விப் பாடத்திட்டம் முழுமையான தமிழைக் கற்பிப்பதாக இல்லை. சுருங்கச் சொன்னால் முத்தமிழ் என்றால் என்ன? என்பதிலேயே பலருக்குத் தெளிவில்லை. தமிழைத் துறைபோகக் கற்ற பெரும்புலவர்களுக்கும் சந்த, வண்ண, சிந்துப் பாடல்களின் இலக்கணங்களில் சிறிதும் தெரியவில்லை. பிற்காலத்தில் உருவாகி வளர்ச்சிபெற்ற இவ்வகைப் பாடல்களை அவர்களுக்கு இயற்றவும் தெரியவில்லை. இவையாவும் இசைத்தமிழ்ப் பகுதிகள். முத்தமிழில் ஒரு கூறாகிய இயற்றமிழ் இலக்கணம் மட்டுமே அவர்களுக்குக் கற்பிக்கப்பட்டது. இசைத்தமிழ் நாடகத் தமிழ் களாகிய மற்ற இரு கூறுகளையும் பற்றிய எந்தச்செய்தியும் அவர்களுக்குக் கற்பிக்கப்பட வில்லை. அவற்றுக்குத் தனித்தனி இலக்கணங்கள் இருக்கின்றன. மூன்று தமிழ்களையும் ஓரளவாவது அறிந்து கொள்ளா தவர்களை எப்படி முழுத்தமிழ்ப் புலவர்களாக ஏற்றுக்கொள்ள முடியும்? எனவே, இனிமேலாவது, தமிழ் கற்கும் மாணாக்கர்களுக்கு இசைத்தமிழ் நாடகத் தமிழ்களின் அடிப்படைகளையாவது கற்பிக்கும் வகையில் தமிழ்ப்பாடத்திட்டம் வகுக்கப்படவேண்டும் என்பது எனது விருப்பம். அதற்காக இசைத்தமிழ் நாடகத்தமிழ்ப் பாடத்திட்டம் ஒன்றை வகுத்துப் பல்கலைக் கழகங்களுக்கு அனுப்பியிருக்கிறேன்.

2. தாளமுள்ள இசைத்தமிழ்ப் பா வடிவங்களில் வண்ணப்பாவுக்கு வண்ணச்சரபம் தண்டபாணி அடிகளாரும், சந்தப்பாவுக்கு வீரபத்திரரும் இலக்கணம் படைத்துள்ளனர். சிந்துப்பாவுக்கு யான் இலக்கணம் வகுத்தி ருக்கிறேன். எஞ்சியுள்ள, எடுப்புத்தொடுப்பு முடிப்புகளுடன் கூடிய உருப்படிக்கு (கீர்த்தனைக்கு) இலக்கணம் தொகுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். என் வாழ்நாளில் இது முட்டின்றி முடிந்தால் மகிழ்வேன்.

3. தேவாரம், திருவாசகம், நாலாயிரம், திருப்புகழ், திருவருட்பா, காவடிச்சிந்து முதலிய இசைத்தமிழ்ப் பனுவல்கள் நீண்டகாலமாக இயற்றமிழ்ச் செய்யுள்போல் அச்சிடப்பட்டுவருகின்றன. அவை அனைத்தையும் இயற்றமிழும் இசைத்தமிழும் வல்ல புலவர்கள் ஆராய்ந்து, யாப்புக்குறிப்பு, பண், தாளம், நடை முதலியவற்றுடன் மறுபதிப்புச் செய்யவேண்டும். இசைக்குறிப்பு (notation) எழுதுதலும் ஏற்றதே, அப்பொழுதுதான் அவை இசைத்தமிழ்ப் பனுவல்கள் என்பது உணரப்படும். முறைப்படிப் பாடுவதற்கும் உதவும்.

4. தமிழ் எழுத்துமயக்கம் என்ற மரபு குறித்துத் தொல்காப்பியம் முதலான இலக்கண நூல்கள் சுருக்கமாகவே கூறியிருக்கின்றன. அதனை விரிவாக ஆராய்ந்து கூறப்படும் இலக்கணம், தமிழிற் கலந்துள்ள அயற்சொற்களை அறிந்துகொள்ளத் துணைசெய்யும். தமிழ் ஒலிமரபைக் காப்பதற்கும் உதவும். இப்போது இப்பணியில் நான் ஈடுபட்டிருக்கிறேன். அது முழுமைபெற்று நூலாகும் வாய்ப்பு அமைந்தால் மனநிறை வடைவேன்.

5. 'தமிழிற் கலந்துள்ள அயல்மொழிச் சொற்களின் அகரவரிசை' ஒன்று மொழிக்காப்புக்கு இன்றியமையாததாகத் தமிழ் ஆர்வலர்களால் உணரப்படுகிறது. நீண்ட காலமாகத் தம் பேச்சில் வழங்கி வருவதால் அயற்சொற்களைத் தமிழ்ச்சொற்கள் என்றெண்ணியே மக்கள் பயன்படுத்திவருகின்றனர். தமிழிலக்கண அறிவும், பன்மொழியறிவும், நடுவுநிலைமையும் படைத்த அறிஞர்பெருமக்கள் தம்முட் கலந்தாராய்ந்து அப்படி ஒரு விரிவான அகரவரிசையை உருவாக்கவேண்டும். இப்பயனுள்ள பெரிய பணியைச் செம்மொழி நிறுவனம் மேற்கொள்வது பொருத்தமாக இருக்கும்.

6. தரமான தமிழ் இலக்கிய இலக்கணங்களில் ஒவ்வொன்றுக்கும் அதில் உள்ள அனைத்துச் சொற்களையும் கொண்ட தனித்தனி அகரவரிசைகள் தொகுக்கப்பட வேண்டும். அவை மொழி இலக்கிய ஆய்வுகளுக்குப் பேருதவியாக அமையும். இவ்வருமையான கருவிநூல்களைப் பெற்றால் ஆராய்ச்சியுலகம் பெரிதும் மகிழும். ஆய்வுகள் செழிக்கும்.

மொழி இலக்கியங்கள் குறித்துச் செய்யவேண்டுவனவாக நான் விரும்புவனவற்றுள் சிலவற்றை இங்கே வெளியிட்டிருக்கிறேன். இவற்றில் என்னால் இயன்றவற்றை என் உடல்நலம் இடம் கொடுக்கும்வரை செய்து வரவேண்டும் என்பதில் நான் உறுதியாய் இருக்கிறேன்.

புகழ்தல் தகுமே!

பைந்தமிழ்ப் பாவலர் புலவர் சி.பெருந்தேவன், புதுச்சேரி - 7

ஆங்கிலக் கலப்பால் அருந்தமிழ் சாதலை
ஈங்கெடுத் துரைத்தவர்! இசைத்தமிழ் தன்னைக்
கற்றறிந்(து) ஆய்ந்து கனிந்த நெஞ்சினர்!
மற்றவர்க்(கு) உதவும் மாண்புறு பெரியார்!
சொல்லும் செயலும் ஒன்றென வாழும்
வல்லமை சான்ற வயவர்! செந்தமிழ்
இலக்கணக் கடலில் மூழ்கி, கற்பார்
கலக்கம் தவிர்த்திடும் கல்வி யாளர்!
பாண்டிச் சேரியா? புதுச்சேரி தானா?
ஈண்டெது முன்னது? என்றாய்ந்(து) உரைத்துப்
புதுச்சே ரிப்பெயர் பொலிவுறச் செய்த
மதுகை யாளர்! மண்ணுல கிதிலே
தீந்தமிழ் போற்றும் "தெளிதமிழ்" இதழை
ஆய்ந்தளித்(து) உதவும் அருந்தமிழ் அறிஞர்!
இலக்கணக் கருத்தரங்(கு) இயற்றிப் போற்றிக்
கலக்கம் உறாத படிதமிழ் காப்பவர்!
பாவலர் பண்ணையால் பயிற்சி அளித்த
நாவலம் மிக்க நல்லா சிரியர்!
மரபு பாக்களின் மாண்பினை விளக்கிப்
பரவச் செய்த பைந்தமிழ்த் தொண்டர்!
"என்தமிழ் இயக்கம்" கண்ட ஏந்தலர்!
தன்புகழ் நாடாத் தனிப்பண் பாளர்!
சங்கத் தமிழாய் இங்கிருக் கின்ற
தங்கப் பாவுடன் தமிழ்நலம் காப்பவர்!
விழிப்புணர் வூட்டி வெல்கஎன்(று) ஊக்கும்
மொழிப்போர் மறவர்! முத்தமிழ்ச் சான்றோர்!
அருந்தமிழ் காவா அரசினர் தந்த
விருதினைத் திரும்ப வீசிய வீரர்!
என்னனை யார்க்கிங்(கு) இயற்றமிழ் ஆசான்!
பொன்னினும் மேலாய்ப் போற்றுதற் குரியவர்!
நூலறி புலவர்! நுண்ணுணர் வாளர்!
வாலறி வன்என வணங்கத் தக்கவர்!
முனைவர் இரா.திரு முருகனார்
தமைநாம் புகழ்தல் தகும்தகும்! தகுமே!

(எனக்குப் பாராட்டு விழா நடத்திச் சிறப்பித்த இலக்கியப் பொழில் நிறுவுநர் தொழில் முனைவர் பராங்குசம், கலைமாமணி பூங்கொடி பராங்குசம் ஆகியோர்க்கும், விழாவுக்கு வந்து வாழ்த்திப் பெருமைப்படுத்திய தோடன்றி, ஒரு பெருந்தொகையை நன்கொடையாக வழங்கிய மருத்துவர் ஐயா அவர்களுக்கும் தலையலாற் கைம்மாறிலேன். பாராட்டு விழாவில் என் தமிழ்ப் பணிகளுக்காக அன்போடு வழங்கப்பட்ட உரூ. 50,000 தொகை வைப்பகத்தில் நிலைவைப்பாக வைக்கப்பட்டு, அதில் வரும் வட்டி, ஆண்டு தோறும், நல்ல தமிழில் எழுதும், பேசும் மொழித்திறன் மிக்க மாணாக்கர்கçeயும், தமிழிசை வல்ல மாணாக்கர்களையும் தேர்வுசெய்து பரிசுகள் தந்து ஊக்குதற்குப் பயன்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் - இரா.தி.)

திருக்குறள் தமிழ், ஆங்கிலப் பாவுரை : 6.4.2008 அன்று விராலி மலையில் திருக்குறள் தமிழ், ஆங்கிலப்பாவுரை நூல் வெளியீட்டுவிழா நிகழ்ந்தது. ஆசான் பெரு. துரைராசன் அரிதின் முயன்று ஆங்கிலத்தில் பாவடிவிலும், அன்னார்தம் இளவல் புலவர் வேங்கடராசன் தமிழிற் குறள்வடிவிலும் திருக்குறளுக்குப் புதிய முறையில் பொருளுரை எழுதியுள்ளார்கள். 550 பக்கங்களும், உரூபாய் 250/- விலையும் உள்ள இந்நூலை, ஆசிரியர் கூட்டணிப் பொதுச்செயலர் திரு சு. ஈசுவரன் வெளியிட, புதுக்கோட்டை மாவட்டத் தொடக்கக் கல்வியலுவலர் திரு எசு. சோமசுந்தரம் பெற்றுக்கொண்டார். தொடர்புக்கு: ஆசான் பெரு. துரைராசன், 'புனித குறள் பூமி' விராலிமலை-621316, புதுச்கோட்டை மாவட்டம்.

தமழோசை நாளிதழ்க்கு வாசகர் வட்டம் : 6-4-08 அன்று குடந்தையில் உலகத்தமிழ்க் கழகத்தின் சார்பில் தமிழர் தன்மான வாழ்வியல் கருத்தரங்கம் நடந்தது. அதில் இனமீட்சிக்கு மொழி மீட்சியே நுழைவாயில் ஆதலின், மொழிநில முட்டறுக்கும் முதற்பணியாக ஜ-ஸ-­ஷ-க்ஷ-ஹ-ஸ்ரீ என்னும் வடமொழி எழுத்துகளை முற்றாக நீக்கியும், அயல்மொழிச் சொற்களை அகற்றியும், தமிழைத் தமிழாக - தமிழுக்காக - தமிழர்க்காகத் தெள்ளு தமிழ் நடையில் அள்ளித் தருகின்ற, ஒரே இதழாகிய தமிழோசை நாளிதழை அரணிட்டுக் காத்துத் துணை நின்று பரப்பு நோக்கத்தில் 'தமிழோசை நாளிதழ் வாசகர் வட்டம்' என்ற அமைப்பு திரு சி. தமிழ்ச்சேவை அவர்களால் தொடங்கிவைக்கப்பட்டது.

தமிழ் ஆட்சிமொழி இயக்கத் தொடக்க விழாவும், முனைவர். அ.கனகராசுவின் ஊர்திகளில் தமிழெண் பதிவு நூல் வெளியீட்டு விழாவும் 11-4-2008 அன்று நடைபெற்றன. திருமதி இராதா சோதிதாசன், பொறியாளர் திரு தேவராசு, பாவலர் இலக்கியன், கலைமாமணி கல்லாடன், புலவர் கி.த.பச்சையப்பனார், பெ.பராங்குசம், முனைவர் அ.கனகராசு, பொறியாளர் மு.பாலசுப்பிரமணியன், ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.

மணம் புணர்ந்தோர் மகிழ்ந்து வாழிய!

விழுப்புரம் வட்டம் மேட்டுப்பாளையம் திரு கி. காத்தவராயன் - இராசேசுவரி இணையரின் மகன் கா. முத்துக்கிருட்டினன், இராம்பாக்கம் திரு கோ. நாகராசன் - செல்வநாயகி இணையரின் மகள் நா.மணிமேகலை ஆகியோர்க்கு 16.04.2008 அன்று புதுவை என்.டி.மகாலில், பாவலர் செம்பியன் தலைமையில் திருமணம் நடந்தது. முனைவர் இரா.திருமுருகன் வாழ்த்து இசைத்தார். இல்லறம் தொடங்கி மணமக்கள் முதலறமாகத் தெளிதமிழ் வளர்ச்சிக்கு உரூபா 500/- நன்கொடை வழங்கினர். இன்று போல் என்றும் குன்றாத இளமையோடு இத் தமிழ் உள்ளங்கள் வாழ்க!