திருமுருகன் அவர்களுக்குச் சிறப்புச் செய்தார்
'தீந்தமிழ்க்கா வலரெ'ன்ற விருத ளித்துத்
திருவாளர் மருத்துவர்ச. இராம தாசர்
திருக்கையால் மேற்கண்ட விருதைத் தந்தார்
அரிதான காட்சியிதைக் காணும் பேற்றை
அடியேனும் பெற்றிருந்தே னஃதென் நல்லூழ்!
பெருமையந்த விருதிற்கே எனப்பு கழ்ந்து
பெரியோர்கள் பேசியதைக் காதால் கேட்டேன்.
சித்தரது வரிசையிலே வைத்துப் போற்றும்
சிறப்பனைத்தும் பெற்றவர்நம் முனைவ ராகும்
இத்தகைய அறிஞர்கள் இல்லை என்றால்?
இலக்கணமே கொலைக்களமாய் மாறிப் போகும்
வித்தகர்நம் திருமுருகன் முத்த மிழ்நூல்
விளக்கமுற விளக்கியுரை யாற்ற வல்லார்
எத்தனைதா னிடர்வரினு மியல்பிற் குன்றா
தெழுதுவதே இவரியற்றும் தமிழ்த்தொண் டாகும்.
கற்றாரின் திருவுடையார் கற்ற தைத்தாம்
கரவாது மற்றவர்க்கும் கற்பிப் பாரே
பெற்றாளும் செல்வத்துள் நிகரே இல்லாப்
பெருஞ்செல்வம் கல்வியன்றி எதுவு மில்லை
செற்றாரும் கைகூப்பு மியல்பிற் றாகும்
செந்தமிழே எனினுமது மிகையா காதே
அத்தகைய செல்வங்கள் நிரம்பப் பெற்றார்
அறிஞர் நம் திருமுருக னவர்க ளாவார்.
எனவேயப் பெரியார்க்கு விழாவெ டுக்க
இலக்கியப்பொ ழில்சார்பில் இசைவு கேட்கத்
தனக்கிதிலே யார்வமிலை என்ற போதும்
தமிழன்பர் விரும்புவதா லேற்றுக் கொண்டார்
முனைவரது பெருமைஎனும் மணம்ப ரப்பும்
விழாமலரைக் கொய்தனுப்பி மகிழ்வித் தீர்கள்
அனைவரது நெஞ்சினிலும் நிலைபெற் றீர்கள்
அன்பொழுகச் சிற்றண்டி யருந்தச் செய்தே!