தலைவர் 1 :"இதைக்கேளாய் உடன்பிறப்பே தமிழ ருக்கே
இரண்டகம்நான் செய்வேனா? நீயே சொல்லு!
பொதுத்தேர்தல் முடியுமட்டும் முப்ப தேநாள்
பொறுக்கத்தான் சொன்னேன்நான் வேறொன் றில்லை
நிதிதிரட்டிச் சுருட்டுபவர் புலிகள் பேரால்
நினைக்கின்றார் நாமுமிவர் போலே என்று
கதையளப்பா ரிவரொப்பார் நினைப்ப தைப்போல்
காகிதப்பு லிகளில்லை நாங்க யளான்றும்"
தலைவர் 2 :"தன்விருப்பம் போல்முடிவை எடுப்ப தற்குத்
தமிழகத்தில் சட்டமன்றம் தான்எ தற்கு?
என்றிங்கே இம்மக்கள் கேட்கும் போது
ஏற்புடைய காரணத்தைக் கூற வேண்டும்.
நன்னிகழ்ச்சி நம்மனையில் நடத்து தற்கு
நாற்பதுநாள் பொறுத்திருநான் ஊரி ரில்லை
என்றயலார் தடைபோட நிறுத்து முங்கள்
ஏழறிவின் செயல்பாடே இரண்ட கம்தான்!"
தலைவர் 1 :"நட்டமிதி லென்னவென்று கூறு கின்றீர்?
நடப்பதெல்லாம் நன்மைக்கே பொறுத்துப் பாரும்
விட்டுவிட வேண்டுமிதை இந்த மட்டில்
வீண்வம்பை விலைகொடுத்து வாங்க வேண்டாம்
திட்டமிதை நிறைவேற்ற வேண்டு மென்றால்
தேர்தலங்கே நடந்தேறித் தீரவேண்டும்
தப்பெதுவும் நடந்துவிட்டா லங்கி ருக்கும்
தமிழர்களின் உடைமையுட னுயிரும் போகும்."
தலைவர் 2 :"அச்சுறுத்த லாயுதத்தைப் பயன்ப டுத்தி
அடக்கிவைத்தா லஃதொருநாள் வெடித்தே தீரும்
பச்சையாகச் சொல்வதென்றால் கன்ன டர்க்கே
பரிந்தன்றோ முப்பதுநா யளாத்தி வைத்தீர்
எச்சரிக்கை செய்கின்றோம் நீங்கள் செய்யும்
இரண்டகத்தா லுமதுகொற்றம் சரிந்தே போகும்!
பொச்சரிப்பின் காரணமாய்ப் புழுதி வாரிப்
போடுகின்றீ ரென்மீது பொறுமை யற்றே."
-இரா. செம்பியன்
தமிழ் விழிப்புணர்வுப் பாடல் வெளியீட்டுக் குழுமம்
மேட்டுப்பாளையம் சாலை, கொங்கம்பட்டு,
விழுப்புரம் மாவட்டம்-605105. பேசி 2699485