
|
பாவலர் செம்பியனாரின்
அறிவியற்சொல் ஒலி வடிவங்கள் என்ற கட்டுரை பற்றிய கருத்துரை முனைவர் இரா. திருமுருகன் தமிழைத் தமிழ் எழுத்துகளாலேயே எழுதவேண்டும். எந்தக் காரணத்தாலும் பிறமொழி எழுத்துகளைப் பயன்படுத்தக்கூடது என்ற உயர்ந்த கொள்கை உடையவர் பாவலர் செம்பியனார். அறிவியற் கலைச்சொற்கள் அறிவியல் வளர்ச்சிக்கு ஈடு கொடுக்கும் அளைவுக்குத் தமிழாக்கம் செய்யப்படாததால், அச்சொற்களை ஆங்கில எழுத்துகளாலேயே எழுதநேரிடுகிறது. அவற்றைத் தமிழ் எழுத்துகளால் எழுதினால் ஒலிமாறி உருமாறிப் போவதையும் பொருள்மாறிப் போவதையும் காண்கின்றோம். காட்டாக (Strainguage, Distortion) என்ற ஆங்கிலச் சொற்களுக்கு நேரான தமிழ்ச் சொல்லாக்கம் இதுவரையில் செய்யப்படவில்லை என்று வைத்துக்கொள்வோம். அவற்றைத் தமிழ் எழுத்தினால் முறையே ச்ட்ரெய்ன்கேச் டிச்டார்சன் என்று எழுதினால் படிப்போர்க்கு என்ன என்பது புரியாது. ஸ்ட்ரெய்ன்கேஜ், டிஸ்டார்ஷன் என்று சமற்கிருத எழுத்தைக்கலந்து எழுதினாலும். கே, டி, என்ற எழுத்துகளுக்குரிய (G.D. என்ற), ஒலிகள் மாறிவிடுகின்றன. எனவே S, G, ஜ், D, ஷ ஆகிய அயல் ஒலிகளையுடைய இச்சொற்களைச் செம்பியனார் படைத்துள்ள ஒலிக்குறியீடுகளைப் பயன்படுத்தி, ச் | ட் ரெய்ன் | கே | ச் என்றும், | டிச் | டார் | சன் என்றும் சரியாக ஒலிக்கமுடியும். தமிழில் இல்லாத ஆங்கிலச் சிறப்பொலிகளாகிய B,D,F,G,H,J,S.X,Z ஆகிய எழுத்தொலிகள் அனைத்துக்கும் செம்பியனார் இவ்வாறு குறியீடுகளைப் படைத்திருக்கிறார். இவற்றின் உதவியால் ஆங்கிலச் சொற்கள் அனைத்தையும் உரிய ஒலி மாறாமல் தமிழில் எழுதி ஒலிக்கமுடியும். ஆனால் இதனை நடைமுறைப் படுத்துவதில் பின்வரும் நிலைமைகளைக் கருத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது : 1) பிற மொழிச் சொற்களை அவற்றின் ஒலி சிறிதும் மாறாமல் தமிழில் ஒலிக்க வேண்டுவது இன்றியமையாததா? மற்ற மொழிகளில் இது கடைப்பிடிக்கப்படுகிறதா? நடைமுறையில் அப்படியில்லை. Julien vinson என்ற பிரஞ்சுப்பெயரை ஆங்கிலத்தில் ஜூலியன் வின்சன் என்றுதான் ஒலிக்கமுடியும். பிரஞ்சில் ழுய்லியே வே சோ என்று ஒலிக்கிறார்கள். நாம் வந்தேன் என்று பேசும்போது இறுதியில் ஒலிக்கும் ஏ என்ற மூக்கொலிபோல் யே, வே என்ற எழுத்துகளை ஒலிக்கிறார்கள். நான் வந்தோம் என்று பேசும் போது ஒ என்று இறுதியில் ஒலிக்கும் மூக்கொலியாக சோ என்பதை ஒலிக்கிறார்கள். இந்த மூக்கொலிகள் ஆங்கிலத்தில் இல்லை. இச்சொல்லைச் சரியாக ஒலிக்க ஆங்கிலோயர் எந்த ஏற்பாட்டையம் செய்து கொள்ளவில்லை. தமிழ் என்ற நம் மொழியின் பெயரை ஆஙகிலத்தில் THMIZH என்று ஒரளவு உரிய ஒலிவர எழுதி ஒலிக்கலாம். ஆனால் ஆங்கிலேயர் அது பற்றிச்சிறிதும் கவலைப்படவில்லை. அவர்களின் மொழி எழுத்துகளைக் கொண்டே எம்மொழிச் சொல்லையும் எழுதி அவர்களின் ஒலிமரபின்படியே ஒலிக்கிறார்கள். 2) மொழி ஒரு பொதுக்கருவி. அதில் சிலர் விருப்பப்படி எந்த மாறுலையும் செய்ய முடியாது. அம்மொழி அறிஞர்கள் அதைத் தேவை என்று ஏற்றுக்கொண்டு படிப்படியே மக்களிடம் புகுத்தவேண்டும். தங்களுக்கு இயல்பாகப் பழகிவிட்ட மொழியில் எந்த மாறுதலையும் எளிதில் ஏற்றுக்கொள்ளாமை மக்கள் இயல்பு. (ணா, ணை, ணொ, ணோ முதலிய சில எழுத்துச் சீர்திருத்தங்கள் பல வாண்டாகியும் இன்னும் சிலரால் ஏற்றுக் கொள்ளப் படவில்லை என்பது கருதத்தக்கது) 3) இக்குறியீடுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் அவற்றைத்தமிழ் நெடுங்கணக்கில் சேர்க்க வேண்டும். ஏற்கெனவே பெரிதென்று கூறப்படும் தமிழ் நெடுங்கணக்கு இதனால் இன்றும் பெரிதாகக்கூடும். அதனைக் குழந்தைகளுக்குக் கற்பிக்கவேண்டும். அப்பொழுதான் அக்குறியீடுகள் பயன்படும் இது எளிய செயலன்று. 4) பிறமொழிச் சொற்களையும் ஒலிகளையும் தமிழில் கலப்பதுபற்றிய சிக்கலில் நம் முன்னோர்களின் கருத்துகள் ஒலிக்கலப்புக்கு உடன்பாடாக இல்லை. பிறமொழிச்சொல் கலப்பினை ஏற்கலாம், ஆனல் அச்சொற்கள் தமிழ் ஒலி முறைக்கு மாறித்தான் தமிழில் இடம்பெற வேண்டும் என்பதில் தொல்காப்பியர் முதல் பொரும்பாலான சான்றோர்கள் உறுதியாயிருக்கின்றார்கள். வடசொல் தமிழில் செய்யுட் சொல்லாகவும் வரலாம் என்று ஏற்றுக்கொண்ட தொல்காப்பியர் அச்சொற்களின் ஒலிசிதைந்தாலும் தமிழ் எழுத்தால் மட்டுமே எழுதி ஒலிக்கப் பெற வேண்டும் என்று, வடசொற் கிளவி வடஎழுத்து ஒரீஇ என்ற நூற்பாவில் கூறுகிறார். HAZ என்ற தூய பயணத்தைக் குறிக்கும் அயல்மொழிச்சொல்லை உமறுப் புலவர் "கச்சு' என்று தமிழ் எழுத்தால்தான் எழுதினார். Bismillah hirrahmanir rahim என்ற மந்திரத்தைப் "பிசுமில்லா கிற்றகுமானிற்றகீம்' என்று அவர் ஒலிமாற்றம் பற்றிக் கவலைப்படாமல் தமிழ் எழுத்துகளால் எழுதினார். பாரதியார் புதுச்சேரியில் இருந்தபோது 1915 சூலைத்திங்களில் ஞானபாநு என்ற இதழில், 'தமிழில் எழுத்துக்குறை' என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதினார். Birendranath Dattha Gupta என்ற வங்காளப் பெயரைப் பீரேந்திரநாத தத்தகுப்தர் என்று தமிழில் எழுதியிருப்பதைப்படித்து, அரவிந்தர் சொல்லிக் சொல்லிச் சிரித்தார் என்றும், பிறமொழிச்சொற்களைச் சரியான ஒலியுடன் தமிழில் எழுத இயலாத குறை நம்மிடம் உள்ளது என்றும், சில புதிய குறியீடுகளை ஏற்படுத்தி இக்குறையைக் களையலாம் என்றும், தாமே இதற்கெனச் சில குறியீடுகள் உண்டாக்கி வைத்திருப்பதாகவும் அவற்றை விரும்பிக் கேட்போருக்கு அனுப்பி வைக்கத் தயாராய் இருப்பதாகவும் அதில் எழுதியிருக்கிறார். இதை வ.உ.சி. ஏற்றுக்கொள்ளவில்லை. அதே ஞானபாநு செப்தம்பர் இதழில் 'தமிழ் எழுத்துக்கள்' என்ற தலைப்பில் அவர் இதை மறுத்து ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதில் சமற்கிருதத்தோடு ழ ற ன F N என்னும் எழுத்துகளையாவது, அவற்றின் குறியீடுகளையாவது சேர்ப்பதற்கு நம் நண்பர் (பாரதியார்) அவர்களும், அரவிந்தர் அவர்களும் முயன்று வெற்றி பெறுவார்களாயின், அவர்கள் தமிழ் மக்களுக்கு ஒப்பற்ற வழிகாட்டி களாவார்கள் என்றும், அவர்கள் நம் தமிழ் மொழியைத் திருத்த முற்படுகிறார்களோ? வருத்த முற்படுகிறார் களோ? என்றும் எழுதி, அயல் ஒலி போற்றும் கொள்கையை மறுத்திருக்கிறார். 1949இல் Z F என்ற ஒலிகளுக்குத் தனி வரிவடிவங்கள் காண்பதற்குப் பெரிய எதிர்ப்பு இருந்தது. எதிர்ப்பாளர்கள் "Fஐ எகிறச்செய்" என்று முழங்கினார்களாம்! இதிலிருந்து அயல் ஒலிகளை எந்த நிலையிலும் தமிழ்மக்கள் ஏற்றுக் கொள்ள வில்லை என்பது தெளிவாகிறது. (இடையில் புகுந்த ஜ ஸ ஷ க்ஷ ஹ ஆகிய சமற்கிருத எழுத்துகளையும் செய்யுள் நடையில் தமிழ்ப் புலவர்கள் பயன்படுத்தவில்லை. இன்று உரைநடையிலும் அவை ஒதுக்கப்படுகின்றன. 5. தமிழ்ச் சிறப்பொலி வடிவங்களாகிய ற ன ழ எ ஒ என்பவற்றைத் தம் மொழியில் சாரியாக ஒலிக்க வடமொழியாளர் எந்த ஏற்பாடும் செய்யவில்லை. இச்சிக்கல்பற்றிய என் முடிவுகள் வருமாறு: 1. எல்லாம் தமிழில் வரவேண்டும் என்ற மொழிப்பற்றின் காரணமாக நாம் அறிவியலில் பின்தங்கிவிடக்கூடாது என்ற செம்பியனார் கருத்தை ஏற்றுக் கொள்ளுகிறேன். ஒரு புதிய கலைச்சொல் தமிழுக்குத்தேவையாயின், அ) அதனைத் தமிழிலேயே உருவாக்க வேண்டும் அல்லது, இயன்றால் உடனே தமிழ் மொழியாக்கம் செய்து கொள்ள வேண்டும். அறிவியற்சொற்களின் தமிழாக்க நூல்கள் துறைதோறும் பலப்பல வெளிவந்துள்ளன. அவற்றை அனைவரும் பயன்கொள்ளும் வகையில் ஒரு தொகுதியாக்க வேண்டும். ஆ) நம் இறுதிக் குறிக்கோள் எல்லாம் தமிழில் என்பதனால், அச்சொல்லுக்கு மொழியாக்கம் வரும் வரும்வரை காத்திருக்காமல், அச்சொல்லை நம்மிடம் உள்ள தமிழ்எழுத்துகளால் எழுதி, அதை அடுத்து அடைப்புக்குறிக்குள் அதை ஆங்கில எழுத்தில் போட்டுக் காட்டிவரலாம். இது தமிழ்வளர்ச்சிக்கு மாறாகாது. இ) 'தமிழிற் பிறமொழி கலப்பது பழுது' என்று கட்டுரையின் தொடக்கத்தில் செம்பியனார் கூறும் உயர்ந்த கருத்துக்கு, ஆங்கிலச் சொற்களையும், குறியீடுகளோடு கூடிய பிறமொழி ஒலிகளையும் தமிழில் கலக்க வாய்ப்பாகும் இம்முயற்சி முரணாகத்தோன்றுகிறது. ஈ) இக் குறியீட்டு முறைப்படி Mist என்பதை 'மிச்|ட்' என்று எழுதவேண்டும். இதில் இடையில் உள்ள | இக் கோடு'ச்' என்ற எழுத்துக்கு உரியதா? ட் என்ற எழுத்துக்கு உரியதா? என்ற ஐயுறவை ஏற்படுத்தக்கூடும். ஒலிவேறுபாடுகளை விளக்கும் மொழியியற் கட்டுரைகள் எழுதும் போது இக்குறியீடுகள் பயன்படும். தமிழில் இல்லாத ஒலிகளுடன் கூடிய பிறமொழிப் பொதுப்பெயர்களை மொழியாக்கம் செய்துகொள்ளலாம். ஆனால் பிறமொழிச் சிறப்புப் பெயர்களை (Proper nouns) மொழிபெயர்க்க முடியாது. அத்தகைய பெயர்களின் சரியான ஒலிகளைக் குறிக்கச் செம்பியனார் குறியீடுகளைப் பயன்படுத்தலாம். காட்டு : Shakespere, Washington முதலிய சிறப்புப்பெயர்களை இக்குறியீடுகளைக் கொண்டு சரியாக எழுதி ஒலிக்கலாம். எனவே, 'உலக மொழி எழுத்தொலிப்புகளைத் தமிழ் எழுத்திலும் காட்டவேண்டிய சூழலில் பயன்படுத்துவதற்காகச் சில புதிய ஒலிப்புக் குறியீடுகளைத் தமிழ் எழுத்தில் சேர்த்துக் கொள்ள வழிவகை காட்டியிருக்கின்றார்' என்று செம்பியனாரின் இக் கட்டுரை பற்றி முனைவர் இரா. மதிவாணன் கூறியுள்ள கருத்தினை யான் முழுமையாக உடன்படுகிறேன். |