
|
மனம் திறந்த மடல்கள்
புலவர் ந. ஞானசேகரன்
திருமுறைகள் தில்லையம்பலத்து மேடையில் ஓதப் பெறுகின்றன என்று எழுதிய அய்யா (இரா.தி) அவர்களே 'செருப்பிருந்தால் உதைத்திருப்பேன் செம்மையாக' என எழுதி என் உள்ளம் குளிர்வித்து விட்டார்கள், எண்ணி மகிழ்கின்றேன். கன்னடமும் சரி, தெலுங்கும், கவின் மலையாளமும் உன்னுதரத்து உதித்தெழுந்தவை எனத் தமிழன்னையை நோக்கிச் சுந்தரம்பிள்ளை வாழ்த்துகிற மாண்புக்கு இழுக்குத்தேடும் வண்ணம் காவிரிச்சிக்கல், ஒகனேக்கல் குடிநீர்த் திட்ட முரண், முல்லையாற்றணை, பாலாற்றணை, சேலம் தொடர்வண்டிக் கோட்டக் கோளாறு என ஆந்திர, கன்டை, கேரளத்தோர் தமிழர்க்கு ஊறு பயப்பதை உன்னுங்கால் திராவிடன் எனும் இன உணர்வே தீய்ந்து 'தமிழன்' நான் எனும் தனித்தன்மையே மேலெழுகிறது. 'தலையின் இழிந்த மயிரனையார் மாந்தர்' எனும் வள்ளுவத்தை முன்னிறுத்தி மொழி, இன உணர்வினைத் தூண்டும் வண்ணம் வரைந்திருந்த ஆசிரியஉரை (ம.இலெ.த.) நனிசிறப்பு. தமிழர் நலத் தன்னார்வப் பணியாற்றத் தமிழ்த்தவம் முகிழ்த்தெழுவதும், அறப்போர்ப்படை உருக்கொள்வதும் தமிழுக்கும் தமிழர்க்கும் அரும்பேறாகும். (நீங்கள் சொல்வதுபோல், 'திருமுறைகள் அம்பலத்துமேடையில் ஓதப் பெறுகின்றன' என்று நான் எங்கும் எழுதியதாக நினைவில்லை. அப்படி எழுதியிருந்தால் எங்கே என்று அன்புகூர்ந்து தெரிவிக்க வேண்டுகிறேன். -இரா.தி.) ஆறு.தமிழ்நிதிவேந்தன், புதுச்சேரி.
முகப்புப் பாவால் தமிழரின் விழிகள் திறக்குமா? ஒவ்வொரு தமிழனும் ஆர்க்காட்டுச் செருப்பை அணிய அணியமாக வேண்டும். தமிழன் தன்மானம் போற்றி வாழ்ந்தால் காலம் அவனுக்கு விரைவில் வெற்றிப் பாதையைக் காட்டும்! இல்லையேல் நாம் தலையின் இழிந்த மயிரனையரே! முனைவர் தமிழப்பன், சென்னை-17.
சிறப்பாசிரியரின் பாடல் மிகச்சிறப்பு. இரண்டாம் பாடலின் மூன்றாமடியில் வரும் சிறப்பே என்பதில், ஏகாரத்தை ஓகாரமாக்கிச் 'சிறப்போ' என்றமைத்திருந்தால் இன்னுஞ்சிறப்பாக இருந்திருக்கும் என்று எண்ணு கிறேன். பொறிஞர் அகன் ஐயர், மாத்தூர்.
'தமிழ் நம் தாய்மொழியும், முகவரியும் மட்டுமல்ல; நமக்குற்ற காப்பரணுமாம்' எனச் சாற்றும் தங்கப்பா ஐயரின் தாள்பணிந்து போற்றுகிறேன்! சங்கமித்திரா, சென்னை.
1. பெரியார் தமிழ்ப்பேரவை - என்ற எனது அமைப்பையும் இவ்வமைப்பின் இதழ்களான, 2. தன்முன்னேற்றம், 3. ஒதுக்கப்பட்டோர் குரல், 4. சங்கமித்திரா விடையளிக்கிறார் ஆகிய இதழ்களையும் 'தமிழ்த்தவத்தில்' சேர்க்க விரும்புகிறேன். என் பங்காகவும் திரட்டுத்தொகையாகவும் (எமது வாசகர்களிடம் மட்டும்) பணம் சேர்த்தும் வழங்க விரும்புகிறேன். உறுப்பினர் கட்டணம் முதலியன உங்கள் முகவரிக்கே அனுப்பலாமா என்று தெரிவியுங்கள். இராச.அப்பாசி, கடலூர்.
தமிழ்த்தவம் என்ற தலைப்பில் தமிழ்நலம் காக்க அறப்போர்ப்படை அணிவகுப்பு, தன்னார்வத் தமிழ்ப்பணி பற்றி நம் இதழில் படித்தேன் அதில் அடியேனுக்கு எழும் வினாக்கள் : 1. ஆர்வலர்கள் சேர முடியுமா என்பது தெளிவுபடுத்தப் படவில்லை. 2. நூறு தமிழ்த்துணை இயக்குநர்கள் வேண்டும் என்றும் கூறியுள்ளீர்கள். அவர்களின் தகுதி என்ன என்று தெரிவித்தாலே அடியேனும் அதற்குத்தகுதி உடையவனா என்பதை அறிய இயலும். 3. 100 தமிழ் அமைப்புகள், சிற்றிதழ்கள், நூறு துணை இயக்குநர்கள் மட்டுமே தேடப்பட்டுள்ளனர். அவ்வியக்குநர்களைத் தமிழ் அமைப்பு மற்றும் சிற்றிதழ்களில் உள்ளவர்களில் தேர்ந்தெடுக்க உள்ளீர்களா என்பது விளங்கவில்லை. தலைவர்கள் மட்டும் அழைக்கப்பட்டு உள்ளனரே, படைவீரர்கள் இருந்தால்தானே படை நடத்த முடியும்? படைவீரர்கள் தகுதி என்ன என்பதும் விளக்கப்படவில்லை. எம்போன்ற எளியோர் தமிழ் ஆர்வலர் இதில் படியேற இயலுமா என்பதே எங்கள் ஐயம். அடுத்த இதழில் விரிவாக அல்லது மடலில் விரிவாக எழுத வேண்டுகிறேன். (சென்ற இதழ் 16ஆம் பக்கத்தில் உள்ள 'தமிழ்த்தவம்' குறித்த கட்டுரை முனைவர் தமிழண்ணல் அவர்கள் எழுதியது. கட்டுரையில் அவர்களின் பெயர் விடுபட்டது அச்சுப்பிழை. அதற்காக முனைவரவர்களையும் தெளிதமிழ் படிக்குநர்களையும் பொறுத்தற்றுமாறு வேண்டுகிறேன். தமிழ்த்தவம் தொடர்பாக இவ்விதழில் வெளியிட்டிருக்கும் மடல்களுக்கு அன்புடன் விடையெழுதுமாறு முனைவரவர்களைக் கேட்டுக்கொள்வேன். முனைவர் தமிழண்ணல் அவர்களின் முகவரி : 'ஏரகம்' 4/732 (585) சதாசிவ நகர் முதன்மைச் சாலை, மதுரை - 625020 பேசி : 0452 - 2533792 - இரா.தி) |