மாணாக்கர் பக்கம்

மாணாக்கர் பரிசு திட்டம்-132க்கான விடை:

சென்ற இதழில் 'ஐயா என் றழைக்கும்' என்ற பாடலாய்க் கொடுத்திருந்த விடுகதைக்கான விடை: 'சார்' என்பது. இச்சொல்லைத் தொல்காப்பியர் குறித்த இடங்கள் :

ஆரும் வெதிரும் சாரும் பீரும்
மெல்லெழுத்து மிகுதல் மெய்பெறத் தோன்றும்
(புள்ளி மயங்கியல் - 68)

சார் என் கிளவி காழ்வயின் வலிக்கும் (மேற்படி-69)

ஐயா என்று தமிழில் அழைக்காமல் "சார்' (Sir) என்று ஆங்கிலத்தில் அழைக்கும் நண்பனை இடித்துரைத்த ஒருவனிடம், அவன் "சார் என்பது தொல்காப்பியர் பயன்படுத்திய சொல்தான்!" என்று வேடிக்கையாகச் சொன்னதாக எழுதப்பட்ட விடுகதை இது. (சார் என்பது தமிழில் ஒரு வகை மரத்தின் பெயர். ஐயா என்ற பொருளில் அதைத் தொல்காப்பியர் சொல்லவில்லை)

இவ் விடுகதைக்குச் சரியான விடையை எழுதியவர் :

சிலம்பூர்க்கிழான், கள்ளக்குறிச்சி என்ற ஒருவர் மட்டுமே. அவர்க்குப் பாராட்டுகள்.

மாணாக்கர் பரிசு திட்டம் - 133

பின்வரும் தொடர்களில் பிரிந்திருக்கும் சொற்களை முறைப்படிப் புணர்த்தெழுக :

1. நாடும் நகரமும் நன்கு அவள் நாடினாள்

2. பொருள் நயமும் சொல் நயமும் நல்ல

3. மனத்துள் தித்திக்கும் தேன் நிகர்ப்பான்

4. புல் நுனிமேல் நீர் போல் நிலையாது இளமை

5. கண்ணில் தெரியவரும் அண்ணல் திருமுகம்

விடையை வரும் மேழம் உ (05.05.2008) க்குள் அனுப்புக.