
|
கண்ணிற் பட்டதும் கருத்திற் பட்டதும்
1. தூய்மையாகிறது சென்னை : தற்போது வெளியூருக்குச் சென்று விட்டு நான்கு ஐந்து மாதங்கள் கழித்துச் சென்னைக்குத் திரும்பினால், நகரமே மாறியிருக்கும். அடுத்த தலைமுறை சென்னை நகரைப் பார்க்கும்போது, இது செருமனி நாட்டின் நகரா? இங்கிலாந்து நகரா? என்று வியக்கும் நிலை உருவாகும் என்றார் கருணாநிதி. அடுத்த தலைமுறையினர் சென்னை நகரைப் பார்த்தால் செருமனி நாட்டின் நகரா? இங்கிலாந்து நகரா? என்று வியப்படைவார்கள் என்று தமிழக முதல்வர் கூறுகிறார். இந்தத் தலைமுறையினரே சென்னை நகரை அப்படித்தான் பார்த்து வியக்கிறார்கள். எங்கும் ஆங்கிலம், எதிலும் ஆங்கிலம் (கடைப்பெயர் பலகைகள் - விளம்பரங்கள் - மக்கள் உரையாடல்) இருப்பதைக் காணும்போது இங்கிலாந்து நகரில் இருப்பது போன்ற உணர்வதான் ஏற்படுகிறது! 2. தமிழ் தமிழ் என்று பேசிக் கொண்டிருந்தால் மட்டும் செம்மொழியான தமிழை உலகமறியச் செய்யமுடியாது. மாறாகத் தமிழ்மொழி இலக்கியங்கள் உலக மொழிகளில் மொழிபெயர்க்க உரிய சூழல் ஏற்பட வேண்டும் என்று உலகச் செம்மொழிகள் குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கில் இலங்கைத் தமிழப் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி வலியுறுத்தியதை நாம் பலமாக ஆதரிக்கிறோம்! அரசு ஆவன செய்ய வேண்டும் என்று எண்ணுகிறோம். செம்மொழி வளர்ச்சிக்குரிய நடவடிக்கைகளைத் தமிழ் நாட்டரசும் செம்மொழி உயராய்வு மையமும் இணைந்து பணியாற்றித் தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும்வகை செய்தல் வேண்டும் எனும் பாரதியின் கனவை நனவாக்கித் தமிழின் சிறப்பைப் பாரறிய உணர்த்த வேண்டும். 3. இந்தியாவிடம் இராணுவ உதவிகளைப் பெறுவதற்காக இலங்கையின் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இந்தியாவுக்கு வந்தார். தமிழர்களைக் கொன்று குவித்த குருதி தோய்ந்த கைகளுக்குச் சொந்த காரான இவருக்கு இந்திய அரசு சிவப்புக் கம்பளம் விரித்துக்கொடுத்த வரவேற்பு தமிழர்களின் உள்ளத்தில் மாறாத வடுவை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியாவின் துணையுடன் தமிழ்ப் போராளிகளைக் கொன்று ஒழிபோம் என்று கொக்கரித்த அவரது கருத்துக்கு மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை. எனவே இந்திய அரசு இலங்கைக்கு வழங்கிய ரேடார்களை உடனடியாகத் திரும்ப பெற வேண்டும் என்றும் எவ்வித ஆய்த உதவிகளையும் வழங்கக்கூடாது என்றும் இலங்கையில் வாழ்கின்ற தமிழ் மக்களைப் பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றம் இந்திய அரசை நான் வலியுறுத்துகிறேன். (18-3-2008 அன்று நாடாளுமன்றத்தில் உறுப்பினர் மருத்துவர் கிருட்டினன் ஆற்றிய உரையின் ஒரு பகுதி, தென் ஆசியச்செய்தி 2008 ஏப்ரல், 1-15-பக்கம் 7) தூங்குகின்றவர்களை எழுப்பலாம்; துங்குவதுபோல் நடிப்பவர்களை எழுப்புவது கடினம். ஈழத் தமிழர்களைக் காக்கும் எண்ணம் சிறிதுமில்லாமல் இலங்கை அரசுக்கு நடுவணரசு ஈந்து வரும் உதவிகளை நிறுத்துவதற்கு, எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே எனும் பாவேந்தர் பாடலுக்கு வலிமை சேர்த்துத் தமிழினம் ஒன்றாகிப் போராட வேண்டும். ஈழத் தமிழனும் இந்தியத் தமிழுனும் ஓர் இனமே என்பதை நடுவணரசு உணர்தல் வேண்டும். தமிழ்நாட்டரசும் இதையுணர்ந்து நடுவணரசுக்கு உணர்த்த வேண்டும். 4. சீனாவில் பிறக்கும் குழந்தைகளுக்கு எந்தப் பெயரையும் சூட்டிவிட முடியாது. குழந்தைகளுக்குப் பெயர்சூட்டும்போதும் வெளிநாட்டு மொழிகளின் எழுத்துக்களையும், குறியீடுகளையும் ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது எனச் சீன அரசு பிறப்பித்துள்ள சட்டம் மிகக்கடுமையாகச் செயல்படுத்தப்படுகிறது சப்பான், டென்மார்க், ஸ்பெயின், செர்மனி, அர்ஜென்டினா போன்ற பல நாடுகளிலும் அரசுகளால் ஏற்கப்பட்டுள்ள பெயர்ப்பட்டியலில் உள்ள பெயர்களில் ஏதாவது ஒன்றைமட்டுமே குழந்தைகளுக்குச் சூட்டவேண்டும். வேறு பெயர்களைச் சூட்டுவதற்கு இசைவு கிடையாது. ஆனால் தமிழ்நாட்டில் தமிழ்க் குழந்தைகளுக்குப் பிறமொழிப் பெயர்களையே சூட்டிப் பெற்றோர்கள் மகிழ்கிறார்கள். அரசு அதைத் தடைசெய்வதும் இல்லை. எங்கும் தமிழ் எதிலும் தமிழென்று முழங்கிக் கொண்டு ஆட்சியைப் பிடித்தவர்களுக்கு என்றும் தமிழுணர்வில்லை; தமிழர்களுக்கும், மொழிமானம், இனமானம் பற்றிக் கவலையில்லை. உணர்வுள்ள தமிழ் அமைப்புகளின் ஒன்றிணைந்த போராட்ட முயற்சியே திருவினையாக்கும். அப்பொழுது தமிழ்மக்கள் தம் பெயரையும் தம்மக்கள் பெயரையும் நல்ல தமிழில் வைத்து மகிழ்வதற்கு அரசாணை வரும். 5. "மழையின் காரணமாகத் தடை!" கலைஞரின் அரசு கண்டுபிடித்த புதிய காரணம்! கடந்த இரு நாட்களாக தொடர்ந்து அதிக அளவு மழை பெய்து வருவதாலும் மேலும் வலுவான மழைபெய்ய வாய்ப்பு உள்ளதாலும் நகரின் சில பகுதிகளில் தண்ணீர் தேங்கி அதனால் ஏற்பட்டுள்ள போக்குவரத்துச் சிக்கலையும் அதன் தொடர்பால் ஏற்படும் சட்டம் ஒழுங்குச் சிக்கலையும் சமாளிக்க வேண்டியதாலும், இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தும் சமூக விரோதிகள் சிலர் ஆர்ப்பாட்டத்தின் போது மறைமுகமாக ஊடுருவிச் சட்டம் ஒழுங்குச் சிக்கலை ஏற்படுத்த உள்ளதாக நம்பத்தகுந்த தகவல் உள்ளது. எனவே 22-03-08 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரியுள்ள மனுவானது நிராகரிக்கப் படுகிறது. தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் மழையில் நனைந்து விடக்கூடாதாம்! ஆடு நனைந்து விடுமே என்று ஓநாய் அழுகிறதாம்! - செ.இரா. |