உன் ஒழுக்கம் நீபிறழ்ந்தால் உன்னோடு
போய்விடுமா? உன்னைப் பெற்றோர்
உன் மனைவி, உன்மக்கள், உறவினர்கள்
உன் அயலார், ஊர்,நா டென்று
மன்னுலகே களங்கமுறும்! என்றாலும்
உன் ஒழுக்க மீறல் தன்னை
"என் உரிமை!" என்கின்றாய்! இன்னொருவன்
உரிமைக்கேன் எதிர்நிற் கின்றாய்?
பெண் ஒருத்தி மனைஇருக்கப் பிறர்மனைநீ
நச்சுகின்றாய், "பெண்டிர் பல்லோர்
எண்ணுகின்றார் என்னை" என எக்களிப்பாய்!
விலை மகளே எனினும் கூடப்
பெண்மை ஒரு புனிதமன்றோ? சதைவெறியால்
பிழை செய்வாய் "உரிமை" என்பாய்
இன்னவெலாம் செய்பவன் நீ, ஈழ மக்கள்
விடுதலைக்கேன் இடர்செய்கின்றாய்?
என்னபிழை செய்தாலும் "என் உரிமை!"
என்கின்றாய் இதுபோல் தானே
தன்னுரிமை வேண்டுகின்றான் இன்னொருவன்,
அதை மட்டும் தடுக்கலாமோ?
மன்னுயிர்க்கு விடுதலையே உயிர் மூச்சாம்,
அதை மறுப்போன் மகனே அல்லன்.
என்தமிழர் விடுதலையை எதிர்க்க உனக்(கு)
ஏது ரிமை, எருமை மாடே?
-ம.இலெ.தங்கப்பா