
|
காகிதப் புலிகளா ?
நாம் நீண்ட காலமாகத் திட்டமிட்டு நம் வீட்டில் நடத்த இருந்த நம் வீட்டுத் திருமணத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற தீய எண்ணத்தில், அண்டை வீட்டுக்காரன் திடுமென நம் வீட்டின் உள்ளே புகுந்து, "இது எங்கள் வீடு. இங்கே உங்கள் திருமணத்தை நடத்த விடமாட்டோம். வீட்டை விட்டு வெளியேறுங்கள்! என்று கலாம் செய்கிறான். நாம் அதைத் தட்டிக்கேட்கிறோம். ஆனால் நம் குடும்பத்தலைவர், பொறுங்கள்; இதைப்பற்றிப் பேசித்தான் முடிவு செய்ய வேண்டும். இப்போது அண்டை வீட்டில் என்னைப் போன்று குடும்பத் தலைவர் இல்லை. அவர் வந்த பிறகு இது பற்றிப் பேசி முடிவு செய்வோம். திருமணத்தை ஒரு மாதம் நிறுத்திவைப்போம், அது வரையில் நடுத்தெருவில் குடியிருந்து அமைதிகாப்போம்" என்று சொன்னால் எப்படி இருக்கும்? நமது ஒகனேக்கல் குடி நீர்த்திட்டத்தைச் செயற்படுத்தாமல் தடுக்கும் கருநாடகக் கலகக் காரர்களின் செயலும், அதற்கான நமது முதல்வரின் எதிர்வினையும் இப்படித்தான் தோன்றுகின்றன. இவற்றைக் கண்டு கொதித்துப் போயிருக்கும் தமிழ் மக்களின் உணர்வை எதிரொலித்த மாமறவன் பழ. நெடுமாறன் அவர்கள், முதல்வர் தமிழர்களுக்கும் தமிழ் நாட்டுக்கும் இரண்டகம் செய்து விட்டதாகப் பேசிய தாகவும், அதற்கு முதல்வர், 'புலிகள் பெயர் சொல்லிப் பலவழிகளில் பொருளீட்டும் காகிதப்புலிகள்' என்று நெடுமாறன் மீது குற்றம் சுமத்தியதாகவும் செய்தி வந்திருக்கிறது. (தமிழ் ஓசை!, 7-4-08) அச்செய்தியில், அண்ணா, காமராசர், குமரி அனந்தன், மூப்பனார் ஆகியோர்க்கு நெடுமாறன் இரண்டகம் செய்திருக்கிறார் என்று சாடியிருக்கிறார் கலைஞர் இதை உண்மை என்றே வைத்துக் கொண்டாலும், நெடுமாறன் செய்ததாகக் கூறப் படும் இரண்டகம் நான்கு பேருக்கு. ஆனால் கலைஞர் செய்ததாகக் கூறப் படும் இரண்டகம் 6.5 கோடிப்பேருக்கு என்றாகிறதே. இவற்றுள் எது பெரிய இரண்டகம்? என்று கேட்கத் தோன்றுகிறது! 'சட்டப்படித் தமிழகம் சரியான நிலையில் இருக்கிறது'. எனவே, கருநாடகத்திடம் புதிய அனுமதி பெறும் தேவையில்லை என்று தமிழக அரசின் தலைமைச்செயலர் திரிபாதியே கூறியிருக்கிறார். ஏற்கெனவே இத்திட்டத்துக்கு ஒப்புதல் கொடுத்துவிட்ட கருநாடகத் திடமிருந்து, மீண்டும் ஓர் ஒப்புதலை எதிர்பார்த்து இன்னும் ஒரு மாதம் காத்திருக்கலாம் என்பது, எல்லாச் சிக்கல்களையும் தள்ளிப்போட்டே வெல்ல முயலும் கருநாடகத்துக்குத் துணை போவதாகவே இருக்கிறது. நம் வீட்டில் நமக்கு உள்ள உரிமையைத் தீர்மானிக்க அண்டை வீட்டுக் காரனை எதிர்பார்த்துக் கொண்டிருக்க வேண்டுமா? சரி, ஒரு மாதத்துக்குப்பின் வரும் கருநாடகத்தின் புதிய முதலமைச்சரும் ஒகனேக்கல் திட்டத்தை ஒப்புக் கொள்ளவில்லை என்றால்? என்ன செய்யப்போகிறோம்? மக்கள் எழுச்சியைப் பயன்படுத்தி இளைதாகக் களைய வேண்டிய முட் செடியை, காலங்கடத்திக் காழ்ப்ப விடுவதற்குக் கண்டனம் தெரிவித்தது அவ்வளவு பெரிய குற்றமா? தொடர்ந்து சிங்களரும் கருநடரும் செய்துவரும் அழிம்புகளுக்கு ஆளாகி அல்லல்படும் தமிழ்மக்களின் நிலை, நடுவணரசின் மனத்தில் எந்த அசைவையும் ஏற்படுத்தவில்லை. 'எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது' என்று கண்ணன் காட்டிய வழியில் அது கண்மூடிக்கிடக்கிறது போலும்! அதுதான் அப்படி யென்றால், 'தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்' என்பது போல், உடன்பிறப்புகளின் துன்பங்கண்டு உணர்வுபொங்க வேண்டிய தமிழ்த் தலைவர் ஒருவர், அதற்கு மாறாக, தமிழர் நலனுக்காகப் பல்லாண்டுகள் சிறையில் கிடந்து உடல் நலத்தைக் கெடுத்துக் கொண்ட தந்நலமற்ற ஈகமறவர், உலகத்தமிழர்கள் தம் தலைவராக ஏற்றுக்கொண்ட அப்பழுக்கற்ற மானமறவர் பழ. நெடுமாறனைப் பார்த்து, புலிகளின் போராட்டத் தையும் நெடுமாறனின் நேர்மையையும் ஒருசேரக் கொச்சைப்படுத்தும் வகையில் 'காகிதப்புலிகள்' என்ற சொல்லைப் பயன்படுத்துவதை எந்த வகையிலும் முறைமைப்படுத்த முடியாது. பெரிய தலைவர் ஒருவர் உணர்ச்சி வழிப்பட்டு இந்த அளவு இழிந்த சொல்லைப் பயன்படுத்த நேர்ந்தமைக்காக மிகமிக வருந்துகிறோம். |