
|
சிறந்தது பயிற்றல்
- சிறுகதை
பொறிஞர் அகன், மாத்தூர். அலைபேசி அழைத்தது. மாறன் எடுத்துக்கேட்டார். "வளன் உங்களுக்குத்தான்; உங்கள் மகள் அழைக்கிறார்". "நான் எழுதிக் கொண்டிருக்கிறேனே... செய்தியை நீங்களே கேட்டுச் சொல்லுங்கள்". சென்ற மாதம்தான் இதனைத் தொடங்கினேன். ஒரு நாளிற்குப் பத்துப் பக்கங்கள் எழுதத் திட்டமிட்டு என் வரலாற்றை எழுதிவருகின்றேன்! என் தொடக்கப் பள்ளிக் காலத்தில் மூன்றாம் வகுப்பு ஆசிரியர் அழகர்சாமி அவர்கள்- 'அடக்கம் உடையார் அறிவிலர்என் றெண்ணிக் என்ற மூதுரை நேரிசை வெண்பாவைச் செப்பலோசையோடு பாடிய நெஞ்சம் நிறைந்த காட்சியைப் பதிவுசெய்து, மேலும் தொடர்கின்ற வேளையில் இவ் வலைபேசி அழைப்பு! "நாளை ஞாயிறு காலை பத்து மணிக்கு உங்கள் மகள் குடும்பத்தோடு வருகின்றாராம்" - என்றார் மாறன்! 'எதற்கு இந்தத் தொல்லை' - என எண்ணியவாறே "வரட்டும்... வரட்டும்" - என்றேன். தேநீரோடு அருகில் வந்தமர்ந்த மாறன், "பகல் உணவுக்கு என்ன செய்யலாம்" -என்றார் "உங்கள் விருப்பப்படியே செய்யுங்கள்". "சோறு தக்காளிக் கூட்டு, பாகல் பொறியல், மோர், மாவடு". "ஆகா... சொல்லும்போதே வாயில் நீர் ஊறுகின்றதே". சமையல் அறைக்குச் சென்றார் மாறன். தூவலை மூடிவைத்துவிட்டுத் தேநீரைப் பருகத்தொடங்கினேன். அன்றொருநாள் வழக்கம்போல உணவுக் கடைக்குச் சென்று பகலுணவை உண்ணத்தொடங்கினேன். எதிர் இருக்கையில் ஒருவர் உணவுண்டு கொண்டிருந்தார். உணவுண்டு வெளியே வந்து நின்றேன். "ஐயா, உங்கள் வீடு எங்கே இருக்கு?" -என்றவாறே என்னோடு உணவுண்டவர் என்முன் நின்றார். "மறைமலை நகர், பாவாணர் தெரு, ஏழாம் எண் வீடு" "தமிழ் இல்லம் - என்று பெரிய எழுத்தில் எழுதப்பட்டிருக்குமே... அந்த வீடா...? நீங்கள் தனியாகவா...?" "ஆமா... துணைவியார் மறைந்து ஆறு மாதமாச்சு... இரு மகன்களும் ஒரு மகளும் வெளியூரில்...! கடை உணவு தான்... நீங்கள்...?" "பாவாணர் தெருவிற்குப் பின்னுள்ள பாவேந்தர் தெரு, மூன்றாம் வீட்டின் ஓர் அறையில் உள்ளேன். வாடகை முந்நூறு. ஆறு ஆண்டாச்சு மனைவி மறைந்து. ஒரே மகனுடன் இருந்தேன். அவனும் போன ஆண்டு வேலைமாறி வேலூருக்குக் குடும்பத்தோடு சென்று விட்டான்". "உங்கள் செலவுக்குப் பணம் எப்படி.. ஓய்வூதியமா?" "இல்லைங்க... மகன் ஆயிரம் தருகிறான். வீட்டுவாடகை முன்னூறு போக மீதிப் பணம்தான் செலவுக்கு. நானே சமைத்துக் கொள்வேன். எப்போதாவது கடையில் உண்பேன்!" இப்படி அறிமுகமானோம். ஒரு பத்து நாள்கள் சென்று என் வீட்டிற்கு வந்தார். வரவேற்றுத் தேநீர் கொடுத்தேன். "உங்களுக்குச் சமைக்கத்தெரியுமா" என்றார். "தேநீர் மட்டும் வடிப்பேன். மாட்டுப்பால் சேர்ப்பதில்லை. இனிப்புக்குத் தேன் கலந்து கொள்வேன். உங்கள் பெயர்?" "மாறன்... நீங்கள்...?" "வளன். பணி நிறைவு செய்த மேனிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர். வீடு என்னுடையது. பிள்ளைகளிடம் பணம் பெறுவதில்லை. ஓய்வூதியமே போதும்". சில பொத்தகங்களைப் பெற்றுச் சென்றார். நான் அவரைப் பற்றிச் சிந்தித்தேன். மனம் வலித்தது. பொத்தகங்களைத் திருப்பிக் கொடுக்க வந்த போது அவரை அமரச் செய்து தேநீர் வடித்துக் கொடுத்தேன். "என் வீட்டிலேயே ஓர் அறையில் தங்கிக் கொள்ளலாமே மாறன். ஒருவருக் கொருவர் துணையாக இருக்கும். உங்கள் வீட்டு வாடகைத் தொகை செலவுக்கு ஆகும்". "வாடகை இல்லாமலா..... உங்களுக்குத் தொல்லையாக இருக்காதா"? "நீங்கள் என்ன குழந்தையா தொல்லை தர? உணவுப் பொருள்களை நான் வாங்குவேன். சமைக்கும் பணி உங்களுடையது. அறை வாடகைக்கோ, உணவுக்காகவோ எதுவும் பணம் வேண்டாம். உங்கள் மகன்தரும் தொகையை உங்களின் பிற தேவைகளுக்கு வைத்துக்கொள்ளுங்கள்". ஓரிருநாள் தயங்கிய பின் என்னோடு தங்கிக்கொள்ள இசைந்தார். எந்தச் சிக்கலும் எழவில்லை. அகவை அறுபதைக் கடந்தவர். என்னை விட ஆறு அகவை இளையவர். வறுமையிற் செம்மைமிக்க இயல்புடைய நல்ல தமிழர். மீண்டும் அலைபேசி அழைக்கவே என் எண்ணம் தடைப்பட்டது. பேசியை மாறனே எடுத்தார். "உங்கள் மூத்த மகன் குடும்பத்தோடு நாளைக்கு வருகிறாராம்..." "அப்படியா... வரட்டும்" என்று கூறிமுடிக்கும் முன்பேயே மீண்டும் அலைபேசி அழைப்பு! "உங்கள் இளைய மகனும் குடும்பத்தோடு வருகிறாராம்..." என்று கூறுயவாறே என்னருகில் வந்தமர்ந்தார்! "என்ன காரியம் என்று புலப்படவில்லை. மாறன். மக்கள் மூவரும் ஒரே நாளில் குடும்பத்தோடு வருகின்றனர். மூவரும் கலந்து பேசியே வருகிறார்கள் எனத் தோன்றுகிறது. ஏதோ நோக்கம் இருக்க வேண்டும்." என்றேன். மீண்டும் எழுத முயன்றேன். மூளையின் ஒரு மூலையில் மக்களின் வருகைச் செய்தி குடைந்தவாறே இருந்ததால், கோவையாக எழுத இயலவில்லை. தூவலை மூடிவைத்துவிட்டுப் பாவாவணரின் 'தமிழர் வரலாறு' நூலைப் படிக்கத் தொடங்கினேன். (தொடரும்) |