
|
'தோள் கண்டார் தோளே கண்டார்'
(கட்டமைப்பு ஆய்வு) முனைவர். செ. வை. சண்முகம் கருத்தாடல் ஆய்வில் வாக்கியங்களை ஒன்றை மற்றொன்றோடு இணைக்க என்னென்ன இணைப்புச் சொற்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்பது கவனிக்கப்படவேண்டும். முதல் மூன்று வாக்கியங்களும் உம்மை வாக்கியங்களாக இணைவதாகக் கொள்ளும்படி அமைந்துள்ளன. முருகன் கண்ணன் இராமன் என்பது தொகையாகவும், 'முருகனும் கண்ணனும் இராமனும்' என்பது உம்மை விரியாகவும் அமையும். அப்படியில்லாமல் முருகன் கண்ணன் இராமனும் (வந்தார்கள்) என்ற முறையிலும் இணையலாம் என்ற முறையில் மூன்றாவது வாக்கியத்தில் 'தடக்கை கண்டாரும்' என்று மூன்றாவது எழுவாய்த்தொடரில் உம்மை சேர்ந்துள்ளதன் மூலம் உம்மை வாக்கியங்களாக இணைகின்றன என்று பொருள். இந்த மூன்று வாக்கியங்களும் பார்த்தவர்கள் செயல். நாலாவது வாக்கியம் பாவலனின் பொதுநிலை விளக் கமும் தத்துவ நிலை விளக்கமும். இங்கு இராமன் முழுவடிவத்தை யாரும் பார்க்கவில்லை என்று பொருள் படுவதால், 'ஆகவே' என்ற இணைப்புச்சொல் அமையவேண்டும். அது கேட்பவர் / வாசகர் ஊகத்துக்கு விடப்பட் டிருக்கிறது. அடுத்தது கடவுளின் திருவுருவைக் கண்டவர்களை 'ஒத்தார்கள்' என்பதால் தத்துவ நிலைவிளக்கம். 'எனவே' என்பது இணைப்புச்சொல் இருக்க வேண்டியதும் வாசகர் ஊகத்துக்கு விடப்பட்டிருக்கிறது. கருத்தன் நிலையில் முதல் மூன்று வாக்கியங்களும் பொதுமக்கள் செயல் என்ற நிலையில் அவை ஒரு கருத்தன். அடுத்தவாக்கியம் பாவலன் விளக்கம் / விமர்சனம் என்ற முறையில் இன்னொரு கருத்தன். இரண்டு கருத்தனும் வாக்கியங்கள் இணைக்கிற முறையோடு ஒத்துப்போகின்றன. யாப்பு : இது அறுசீர்விருத்தம். இரண்டு தொடைக்கட்டுகள் அமைந்துள்ளன. அதாவது முதல் மூன்று அடிமோனை பெற்றும் கடைசி அடி தனித்தும் அமைந்துள்ளன. ஆனால் கடைசி இரண்டு அடி இயைவு (-ஆர் என்ற பலர் பகுதி பெற்றுள்ளதால் சொல்லடி இயைபு) பெற்றுத் தொடைமேவல் (Over - lapping) பெற்றுள்ளது. அதாவது மூன்றாவது அடி, அடி மோனையால் முந்தைய இரண்டு அடியோடும் அடிஇயைபால் முந்தைய அடியோடும் தொடைமேவல் பெற்றுள்ளது. அதனால் கட்டமைப்பு நெகிழ்ச்சி உடையதாக அமைகிறது. இங்கு ஒருமொழி வரலாற்று உண்மையை மனத்தில் கொண்டால் கடைசி இரண்டு அடியும் அடிமுற்று எதுகை கொண்டதாகவும் கருதலாம் என்பது தெரியவரும். வீர சோழியம் ழகரம் யகரமாக உச்சரிக்கப்பட்டிருக்க வேண்டும் என்பதை ழகரமும் ளகரமும் ஒரேவித புணர்ச்சிபெற்று வரும் என்று (19) குறிப்பிட்டுள்ளது. வாழ்+நாள்தவாணாள், வாள்+நாள்தவாணாள். சங்க இலக்கியத்திலே வாணாள் என்றும் இடைக்காலத்தில் சோணாடு (சோழ+ நாடுத சோழ்+நாடுதசோணாடு) என்ற வடிவமும் ழகரளகர மாற்றத்தை உறுதி செய்கின்றன, எனவே ஊழ்கொண்ட என்று எழுத்து மொழியில் எழுதியிருந்தாலும் படிப்பவர் ளகரமாகவே உச்சரித்திருக்கலாம். அப்போது கேட்பவரும் ஊள் கொண்ட என்றே உணர்வார். அதனால் மொழியில் நடைபெற்ற ஒலி மாற்றம் செய்யுளில் தொடை அமைப்பு வழியாகவும் உணர்ந்து கொள்ள முடியும் என்ற கருத்து, மொழி இயல் அறிஞர்களாலும், யாப்பியலாளராலும் முன் வைக்கப்பட்டுள்ளது. அதன்படி கடைசி இரண்டு அடி அடிமுற்று எதுகையும் இயைபும் பெற்று ஒரு தொடைக்கட்டாக அமையும் என்று கருதலாம். சீர் : அறு சீர் கொண்ட 4அடி விருத்தம். நாலு அடியிலும் முதல் சீர் மூவசை கொண்டதாகவும் ஏனையவை இரண்டு சீர் கொண்டவையாகவும் அமைந்துள்ளன. இன்றைய அச்சுப் பதிப்புச் சீர் அமைப்பில் குழப்பத்தை உண்டு பண்ணும் படி அமைந்துள்ளது. பாட்டின் பொருளுக்கு முக்கியத்துவம் கொடுத்துச் சீரமைப்பும் சந்த அமைப்பும் இன்று புறக்கணிக்கப்படுகின்றன. சில இடங்களில் ஒரு அடியை ஒரு வரியாகப்பதிப்பிக்காமல் இரண்டு வரியாகவும் அச்சடிக்கும் முறையும் காணப்படுகிறது. 'வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு' என்பது ஒரு குறளடி (4), அது வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு என்பது பொருள் எளிதில் புரிவதற்கு அச்சடிக்கப்படுகிறது. அது இரண்டாவது மூன்றாவது சீரும் கலித்தளை அமைவதால் தளைதட்டும் என்று யாப்பியல் அறிஞர்கள் கூறுவார்கள். பொதுமக்கள் பதிப்பாக வரும் திருக்குறள் பதிப்பில் பொது மக்கள் யாப்புப் பற்றிக் கவலைப்படமாட்டார்கள், அவர்களுக்குக் குறளின் பொருளே முக்கியம். ஆனால் முதுகலை மாணவர்கள் யாப்பு வழிச் சீரமைப்பை அறிந்து கொள்ள வேண்டும். இங்கு யாப்பிலக்கணம் மட்டும் அல்லாமல் பாட்டின் உச்சரிப்பும் ஓசை நயமும் யாப்பு முறைப்படியான அச்சில் புதைந்துள்ளது சுட்டிக்காட்டத் தகுந்தது. வேண்டுதல் வேண்டாமை என்று அச்சிடும் போது 'வேண்' என்ற இரண்டாவது சொல்லின் பகுதி முக்கியத்துவம் பெறாமல் எதிர்மறையும் தொழில் பெயரும் முக்கியத்துவம் பெறும். அதாவது தமிழில் ஒவ்வொரு சொல்லின் முதல் எழுத்தே ஒலி அழுத்தம் (stress) பெறும். அந்த முறையில் டாமை தனிச்சீராக அமையும் போது எதிர்மறைப் பொருளே ஒலி அழுத்தம் பெறும். அந்த முறையில் 'தடக்கை கண்டாரும் அஃதே' என்றும் 'உருவுகண் டாரை எத்தார்' என்பவை யாப்பிலக்கணப்படி சீரமைப்பும் ஒத்த அமைப்பும் அமையும். அதாவது 'டாரும்', 'டாரை' என்பவை தனிச்சிராக அமைகின்றன என்றால் காலவிகுதி ஒலி அழுத்தம் பெற்று வினையாலணையும் பெயர் என்று எளிதாக உணரும்படி அமையும். இந்தக் கவிதையில் \கண்டார்' என்ற சொல்லின் மாறுபட்ட சீரமைப்பு எல்லோருடைய கவனத்தையும் கவரும். அப்படியே தோள் என்பது ஒரு சீரின் பகுதியாகவும் 'தோளே' என்பது தனிச்சீராகவும் அமைந்துள்ளதும் கவனிக்கத்தகுந்தது. அதனால் 'தோள் கண்டார்', 'கண்டார் என்ற சீரமைப்பில் இரண்டு உண்மைகள் புதைந்துள்ளன; ஒன்று உச்சரிப்பு; மற்றொன்று இடம் நிரப்புதல் என்ற வேறுபாடு வெளிப் படையாகத் தெரிகிறது. (தொடரும்) |