ஆண்டு : கரு
இதழ் :
தி. ஆ. உ0௩௯, ஆடவை,
15 - 06 - 2008
தமிழ் நாட்டில் நடுவண் பல்கலைக் கழகங்கள்

புறாவளரும் கூண்டுக்குள் கழுகி னுக்கோர்
பொற்படுக்கை விரிப்பதுபோல், உழைப்பின் குன்றாம்
கறையானின் புற்றுக்குள் சுரண்டி வாழும்
கருநாகம் குடியிருக்க விடுத்தல் போலும்;
பிறர் நாட்டுள் ஊடுருவி அமெரிக் காவாம்
பேய்நாடு படைத்தளங்கள் அமைத்தல் போலும்;
ஒரேநாடென்று ஏய்த்தபடி வடக்க ரெல்லாம்
ஊடுருவித் தமிழ்நாட்டை அழிக்கின் றாரே!

பைந்தமிழர் கல்விக்குள் தில்லி என்னும்
பாம்புவந்து கொடு நஞ்சை உமிழ்வ தற்கும்,
இந்திஅரி யணைஏறத் தமிழ்ஓர் மூலை
இடுக்கினிலே கைகட்டி நிற்ப தற்கும்,
வந்த பிற மாநிலத்தார் அலுவல் பெற்று
வாழ்வதற்கும் தமிழர் எச்சில் பொறுக்கு தற்கும்
நந்தலைவர் தமிழ்நிலத்தை விற்றுத் தின்பார்
நடுவண்பல் கலைக்கழகம் அமைப்ப தற்கே!

- ம.இலெ.தங்கப்பா